மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டத்தில் ரஞ்சன் சவுத்ரி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. தொடர்ந்து இரண்டாவது முறையாக 10 சதவிகித இடத்துக்கும் குறைவான இடங்களையே கைப்பற்றியதால் இப்போதும் மக்களவை பிரதான எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் இழந்துள்ளது. ஏற்கனவே நடைபெற்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவர் யார் என்பது தேர்வு செய்யப்படவில்லை.

 

நேற்று மக்களவை கூடிய நிலையில் இதுவரை மக்களவை காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதில் குழப்பம் நீடிக்கிறது. அவையில் கட்சி எம்.பி.க்களை யார் வழி நடத்த போகிறார் என்ற கேள்வியும் எழுந்திருந்தது. இந்த பதவிக்கு மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கேரளாவை சேர்ந்த கே.சுரேஷ் மற்றும் சசி தரூர், பஞ்சாபை சேர்ந்த மணிஷ் திவாரி ஆகியோர் போட்டியில் இருந்தனர். 

இந்நிலையில், சோனிகாந்தி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் உயர்மட்டக் கூட்டத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார். இவர் மேற்கு வங்க மாநிலம் பெர்ஹாம்பூரில் தொகுதியில் வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.