சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்
சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. மொத்தம் 90 உறுப்பினர்களை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பூபேஷ் பாகேல் உள்ளார். சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால், அம்மாநிலத்துக்கு நடப்பாண்டு இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
எதிர்வரவுள்ள தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சி முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும், வகுக்கப்பட வியூகங்கள் குறித்தும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், மாநில பொறுப்பாளர் குமரி செல்ஜா, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மல்லிகார்ஜுன கார்கே, சத்தீஸ்கர் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வர கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
“'கர்போ நவ சத்தீஸ்கர்' என்பது நமக்கு ஒரு முழக்கம் மட்டுமல்ல, மாநிலத்தின் முன்னேற்றம் மற்றும் சமூக நீதிக்கான இலக்கு. சத்தீஸ்கர் மக்களும், காங்கிரஸ் கட்சியின் மீது அவர்களுக்குள்ள அசைக்க முடியாத நம்பிக்கையும், கட்சியை தொடர்ந்து வளர்ச்சியை நோக்கி முன்னெடுத்துச் செல்லும்.” என மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு சத்தீஸ்கர் மக்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வருவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய கூட்டத்தின்போது, சத்தீஸ்கர் தேர்தலில் காங்கிரஸின் வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கட்சியின் சத்தீஸ்கர் பிரிவு தலைவர் மோகன் மார்க்கம் மற்றும் டிஎஸ் சிங் தியோ உள்ளிட்ட அமைச்சர்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
“சட்டமன்றத் தேர்தலுக்கு கட்சி தயாராக இருப்பதாகவும், மாநிலத்தில் காங்கிரஸ் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட 'நவ சத்தீஸ்கர்' மாதிரியைப் பின்பற்றி மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.” என கூட்டத்திற்கு பின்னர் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார்.
