குஜராத்தில் காங்கிரஸ் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த ஹர்திக் பட்டேல் கன்னத்தில் ஒருவர் திடீரென அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

குஜராத் மாநிலத்தைச் பட்டேல் இனத்தை சேர்ந்தவர் ஹர்திக் படேல். பட்டேல் இன மக்களுக்கு அரசு வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறுகோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி பிரதமர் மோடியையே அதிர்ச்சி அடைய செய்தவர். இந்த சம்பவத்துக்கு அடுத்து ஹர்திக் பட்டேலை நாடே உற்று நோக்கியது. கடந்த முறை குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றபோது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்தார். 

இதனால் பாஜகவுக்கு பல தொகுதிகளில் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் அவர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.  மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மீதுள்ள குற்ற வழக்குகளால் அவர் தேர்தலில் போட்டியிடாத நிலைக்கு தள்ளப்பட்டார். 

 

இந்நிலையில் காங்கிரஸ் ஆதரவாக பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே குஜராத் மாநிலம் சுரேந்தரநகர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் ஹர்திக் படேல். அப்போது திடீரென்று மேடையேறிய ஒருவர், மைக்கில் பேசிக்கொண்டிருந்த ஹர்திக் படேலின் கன்னத்தில் அறைந்தார். பின்னர் அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் அவரை சரமாரியாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.