பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பது ஆம் ஆத்மி தான் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை, காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் விமர்சித்துள்ளார்

டெல்லி அரசு அதிகாரங்களை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு சாதகமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது. ஆனால், டெல்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு அவசர சட்டத்தை இயற்றியுள்ளது. இந்த சட்டத்தின்படி துணை நிலை ஆளுநருக்கு பரவலான அதிகாரம் இருக்கும் என தெரிகிறது. டெல்லியில் அதிகார மையத்தை தங்களது கட்டுக்குள் கொண்டு வரும் வகையிலான இந்த மசோதாவை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது.

பாஜகவின் தனி பெரும்பான்மை காரணமாக மக்களவையில் இந்த மசோதா எளிதில் நிறைவேறிவிடும். ஆனால், மாநிலங்களவையில் சிக்கல் எழும் நிலை உள்ளது. இந்த மசோதாவை மாநிலங்களவையில் தோற்கடிக்கும் முயற்சியில் ஆம் ஆத்மி இறங்கியுள்ளது. இதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து மசோதவை எதிர்க்குமாறு கோரிக்கை விடுத்து வருகிறார்.

பெரும்பாலான எதிர்கட்சிகள் அவருக்கு ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்து நிலையில், இந்த மசோதா மீதான எதிர்ப்பை காங்கிரஸ் கட்சி இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

பாஜகவை வீழ்த்த ஒப்புக் கொண்ட எதிர்க்கட்சிகள்: சிம்லாவில் அடுத்த கூட்டம்!

இதனிடையே, பாட்னவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், செய்தியாளர்கள் சந்திப்பை புறக்கணித்தார். மேலும், “டெல்லி அவசரச் சட்டத்தை எதிர்ப்பதாக அறிவிக்கும் வரை, காங்கிரஸ் பங்கேற்கும் ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளின் எதிர்காலக் கூட்டங்களில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்பது கடினம்.” என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

“தனிப்பட்ட விவாதங்களின்போது, டெல்லி அவசர சட்டத்தின் மீதான வாக்கெடுப்பின்போது, தங்கள் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள் என மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்சினையில் வாக்களிப்பதில் இருந்து காங்கிரஸின் புறக்கணிப்பு, இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதலை மேலும் அதிகரிக்க பாஜகவுக்கு உதவும். இன்று, பாட்னாவில் ஒத்த எண்ணம் கொண்ட கட்சிக் கூட்டத்தின் போது, பல கட்சிகள் கறுப்புச் சட்டத்தை பகிரங்கமாகக் கண்டிக்குமாறு காங்கிரஸை வலியுறுத்தின. ஆனால், காங்கிரஸ் அதற்கு மறுத்து விட்டது.” எனவும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், டெல்லி அரசின் அதிகாரத்துவத்தை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராக ஆதரவு திரட்டி வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது சொந்த அறிக்கைகளால் குழப்பத்தில் இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் சாடி வருகின்றனர். அந்தவகையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாஜகவுடன் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மாக்கன் குற்றம் சாட்டியுள்ளார். 2019 ஆம் ஆண்டு ஜம்மு -காஷ்மீரின் மாநில அந்தஸ்தை ரத்து செய்வது குறித்து மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக கெஜ்ரிவால் பதிவிட்ட ட்வீட்டை மீண்டும் பதிவிட்டு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அஜய் மக்கான் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Scroll to load tweet…

இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவாலின் பழைய ட்வீட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் பதிவிட்ட ட்வீட்டை இணைத்துள்ளேன். இதனை பார்த்த பிறகாவது பாஜகவுக்கு ஆதரவளிப்பது யார் என்ற சந்தேகம் இன்னமும் இருக்கிறதா? 542 மக்களவை உறுப்பினர்களில் 1 உறுப்பினரை மட்டுமே கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவை கோருகிறது. ஒரு எம்.பி.யை வைத்திருக்கும் ஆம் ஆத்மி தலைவர் காங்கிரசுக்கு தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். எங்களுக்கு எது நல்லது கெட்டது என்று அவர் சொல்கிறாரா? இப்படியா ஒருவர் ஆதரவு கேட்பது? சிறை செல்வதைத் தவிர்க்கவே கெஜ்ரிவால் இதையெல்லாம் செய்கிறார் என்பது நாட்டு மக்களுக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டது. ஊழல் நடந்தால், தண்டனை வழங்கப்பட வேண்டும், இதுதான் சட்டத்தின் ஆட்சி.” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370ஆவது பிரிவை நீக்கி, இரு யூனியன் பிரதேசங்களாக அந்த மாநிலத்தை கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு பிரித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.