கடந்த காலங்களில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணியின் போது பின்பற்றப்பட்ட தொகுதி பங்கீட்டு வழிமுறையின்படி ஜார்கண்டில் கூட்டணியை காங்கிரஸ் அமைத்திருக்கிறது.

ராஜிவ் காந்தி - எம்.ஜி.ஆர்., ராஜிவ் காந்தி - ஜெயலலிதா காலத்தில் காங்கிரஸ் - அதிமுக கூட்டணி ஏற்பட்டபோது நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளிலும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அதிக தொகுதிகளிலும் போட்டியிடுவது என்ற வழிமுறையைப் பின்பற்றினார்கள். இதே வலிமுறையைத் தற்போது ராகுல் காந்தி கையில் எடுத்துள்ளார்.  

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இந்தக் கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அதிக தொகுதிகளிலும்  சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா அதிக தொகுதிகளில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளன.

 

இதுபற்றி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் கூறும்போது, “ஜார்க்கண்டில், நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் போட்டியிடும்; சட்டசபை தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அதிக இடங்களில் போட்டியிடும். தொகுதி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.  

விரைவில் முடிவு எட்டப்படும். பா.ஜ.,வை எதிர்த்து மெகா கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என்பது விருப்பம். இந்தக் கூட்டணி குடும்பத்தில், அண்ணனாக காங்கிரஸ் செயல்பட வேண்டும்.” என்று தெரிவித்தார். ஜார்க்கண்டில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 12 தொகுதிகளை கைப்பற்றியது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இரு தொகுதிகளை வென்றது. காங்கிரஸ் போட்டியிட்ட எல்லா தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்தது.