Congress in victory

பஞ்சாப், குர்தாஸ்பூர் மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட சுனில் ஜாஹர் தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வந்தார்.

சுனில் ஜாஹர் 1, 08,230 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட சலேரியா இரண்டாவது இடத்திலும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மூன்றாவது இடத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ் வேட்பாளர் சுஜில் ஜகார், 1,93,219 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பாஜக 2-வது இடத்தையும், ஆம் ஆத்மி கட்சி 3-வது இடத்தையும் பிடித்தன. 

வாக்கு எண்ணிக்கையின்போது காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்த நிலையில், பஞ்சாப் மாநில அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து கூறும்போது, எங்கள் எதிர்காலத் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு, சிகப்பு ரிப்பனில் சுற்றப்பட்ட அழகான பரிசுப்பொருள் இந்த வெற்றி என்று கூறியுள்ளார். இந்த வெற்றி எதிர்கால நிகழ்வுகளை முடிவு செய்யப்போகிறது என்றும் சித்து கூறினார்.

இதேபோல், கேரள மாநிலம் மலப்புரத்தில் வேங்கரை சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிசார்பில் போட்டியிட்ட இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் காதர் வெற்றி பெற்றுள்ளார். அவர் 23,310 ஓட்டுகள் வித்தியாசத்தில், வெற்றி பெற்றுள்ளார்.