மகாராஷ்டிரா அரசு மருத்துவமனை மரணங்கள்: காங்கிரஸ் கடும் கண்டனம்!

மகாராஷ்டிர மாநில அரசு மருத்துவமனை உயிரிழப்புகளுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

Congress hits out Maharashtra hospital deaths and demands probe smp

மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் அரசு மருத்துவமனையில் 24 பேர் இறந்தது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. அம்மாநில அரசின் சுகாதார அமைப்பு குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

நான்டெட் அரசு மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை 12 குழந்தைகள் உட்பட 24 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக மகாராஷ்டிர மாநில உயர் சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜின கார்கே தனது எக்ஸ் பக்கத்தில், “உயிரிழந்த நோயாளிகள் மருந்து மற்றும் சிகிச்சை இல்லாததால் இறந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் தானேவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. அதில் 18 நோயாளிகள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவது மாநில அரசின் சுகாதாரத்துறையின் மீது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.” என ஆளும் பாஜக-சிவசேனா அரசை சாடியுள்ளார்.

இந்த அலட்சியத்திற்குக் காரணமான குற்றவாளிகளுக்கு நீதித்துறை மூலம் கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

பாஜக அரசு விளம்பரத்திற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவழிக்கும் போது குழந்தைகளுக்கான மருந்துகளுக்கு ஏன் பணம் இல்லை என்று இது தொடர்பாக அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

அதேபோல், அதிக எண்ணிக்கையிலான இறப்புகளுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

நியூஸ் க்ளிக் ரெய்டு: பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா கவலை!

“"பாஜக அரசு தனது விளம்பரத்திற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவழிக்கிறது, ஆனால் குழந்தைகளுக்கு மருந்துகளுக்கு பணம் இல்லை? பாஜகவின் பார்வையில், ஏழைகளின் உயிருக்கு மதிப்பில்லை.” என ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

“இறந்த ஆன்மாக்கள் சாந்தியடையட்டும். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.” என பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி தனது மவுனத்தை கலைக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக, மகாராஷ்டிராவின் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் திலிப் மஹாய்சேகர் கூறுகையில், “கடந்த 24 மணி நேரத்தில், நான்டெட் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் 24 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதில், 12 பேர் குழந்தைகள். அவர்கள் உள்ளூர் தனியார் மருத்துவமனைகளால் சிகிச்சைக்காக இங்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள். எஞ்சியவர்கள் பெரியவர்கள். அவர்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர்.” என தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து டாக்டர் சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் டீன் எஸ்ஆர் வகோட் செய்தியாளர்களிடம் கூறுகையில், 12 குழந்தைகளில் 6 பேர் ஆண் குழந்தைகள், 6 பேர் பெண் குழந்தைகள். அவர்களில் பெரும்பாலோர் மிகக்குறைந்த எடை கொண்ட 0-3 நாள் வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios