Asianet News TamilAsianet News Tamil

குற்ற சம்பவங்களுக்கு ராஜஸ்தானை நம்பர் 1 ஆக்கியுள்ளது காங்கிரஸ்: பிரதமர் மோடி தாக்கு!

குற்ற சம்பவங்களுக்கு ராஜஸ்தானை நம்பர் 1ஆக காங்கிரஸ் மாற்றியுள்ளது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்

Congress has brought Rajasthan number one in terms of corruption riots alleges pm modi smp
Author
First Published Oct 5, 2023, 1:54 PM IST | Last Updated Oct 5, 2023, 1:54 PM IST

இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். காலை 11.15 மணியளவில், ராஜஸ்தானின் ஜோத்பூரில், சாலை, ரயில், விமானப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் உயர் கல்வி போன்ற துறைகளில் சுமார் ரூ.5000 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். மேலும், முடிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்த அவர், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

ராஜஸ்தான் ஜெய்சால்மரை டெல்லியுடன் இணைக்கும் புதிய ரயில் - ருனிச்சா  விரைவு ரயில் மற்றும் மார்வார்  சந்திப்பு- காம்ப்ளி  படித்துறையை இணைக்கும் புதிய பாரம்பரிய ரயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “ஜோத்பூர், மார்வார் மக்களுக்கு இன்று பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. நான் ஏற்கனவே டெல்லியில் இருந்து ஒரு சிறப்பு பரிசுடன் தயாராக வந்துள்ளேன். உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கான சிலிண்டர் மானியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், உஜ்வாலா பயனாளிகளுக்கு 600 ரூபாய்க்கு மட்டுமே எரிவாயு சிலிண்டர்கள் வழங்க பாஜக அரசு முடிவு செய்துள்ளது.” என்றார்.

பாஜக அரசாங்கத்தைப் பொறுத்தவரை, உங்கள் ஆரோக்கியமே எங்கள் முன்னுரிமை. ஒருபுறம், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச சிகிச்சை வசதிகளை வழங்குகிறோம், மறுபுறம், சாதனை எண்ணிக்கையில் நவீன மருத்துவமனைகளை உருவாக்குகிறோம் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

 

 

சுற்றுலாவில் ராஜஸ்தானை நம்பர் 1 மாநிலமாக மாற்றுவதே பாஜகவின் திட்டம் என்ற பிரதமர் மோடி, “ஆனால், அதை யாரால் சாதிக்க முடியும்? மோடியால் அது முடியாது, உங்கள் வாக்குகளால் அதனை சாதிக்க முடியும். உங்களின் வாக்கு பலத்தால் ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைக்கும். அப்போது, சுற்றுலாத்துறையில் நம்பர் 1 மாநிலமாக ராஜஸ்தான் மாறும்.” என்றார்.

“ராஜஸ்தானின் வளர்ச்சிக்காக மத்திய பாஜக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால் இங்குள்ள நிலையைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. ஊழல் மற்றும் கலவரத்தில் ராஜஸ்தானை நாட்டின் முன்னணி மாநிலமாக காங்கிரஸ் மாற்றியுள்ளது. பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளில் ராஜஸ்தானை நம்பர் 1 ஆக்கியுள்ளது காங்கிரஸ். போதைப்பொருள் வியாபாரத்திற்கு காங்கிரஸ் சுதந்திரம் அளித்துள்ளது.” என்று சரமாரியாக தாக்கிப் பேசினார்.

பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்!

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “நான் உங்களுக்கு இன்னும் ஒரு வாக்குறுதியை அளிக்கிறேன். காங்கிரஸின் பேப்பர் லீக் மாஃபியா இங்குள்ள லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்கியுள்ளது. இதில், ராஜஸ்தான் இளைஞர்கள் நீதி கோருகின்றனர். இதன் மீது பாஜக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.” என்றார்.

“சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்த நிலையில் முதலீடுகள் நடைபெறாமல் ராஜஸ்தானில் வணிகம் சீர்குலைந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் அரசு ராஜஸ்தானின் நலனை விட தனது வாக்கு வங்கியை அதிகம் விரும்புகிறது. ஜோத்பூர் கலவரத்தில் எரியும் போது, முதல்வர் என்ன செய்து கொண்டிருந்தார்? இங்கு வன்முறை வெடித்து அப்பாவிகள் கொல்லப்பட்டபோது, காங்கிரஸ் தலைவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறார், சாதாரண பெண்கள் மற்றும் பெண்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.” என்று பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.

ஐந்து ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு ஒரு அடி கூட முன்னேற்றத்தை நோக்கி எடுத்து வைக்கவில்லை. சிவப்பு டைரி பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா? அந்த டைரியில் காங்கிரஸின் ஒவ்வொரு ஊழல்களும் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். அந்த டைரியின் ரகசியங்கள் வெளியில் வரக்கூடாதா? நேர்மையற்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். உண்மை வெளிவர வேண்டும் என்றால், பாஜக ஆட்சியை நீங்கள் அமைக்க வேண்டும் எனவும் அவர் வாக்கு சேகரித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios