என்னை குழி தோண்டி புதைப்பதில் காங்கிரஸ் மும்முரமாக உள்ளது: பிரதமர் மோடி
காங்கிரஸ் தன்னை குழிதோண்டி புதைக்க முயல்வதாகவும் மக்களின் ஆசி தனக்கு அரணாக உள்ளதாகவும் பிரதமர் மோடி சொல்லிக்கொள்கிறார்.
நான் நாட்டு மக்களுக்காக உழைக்கிறேன்; ஆனால், காங்கிரஸ் என்னை குழி தோண்டி புதைப்பதில் மும்முரமாக இருக்கிறது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி 16,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார். பெங்களூரு - மைசூர் விரைவுச்சாலையை திறந்துவைத்த அவர், மைசூர்-குஷால்நகர் 4 வழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், "கடந்த சில தினங்களாக பெங்களூரு - மைசூரு விரைவுச்சாலையின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. நம் நாட்டு வளர்ச்சியைக் கண்டு இளைஞர்கள் பெருமையுடன் செல்பி எடுத்துகொண்டனர். கர்நாடகாவில் பெங்களூருவும் மைசூருவும் முக்கியமான நகரங்கள். ஒரு நகரம் தொழில்நுட்பத்திற்கும் , மற்றொரு நகரம் பாரம்பரியத்திற்கும் பெயர் பெற்றது. இரு நகரங்களையும் தொழில்நுட்பத்தின் மூலம் இணைப்பது முக்கியமானது." என்றார்.
தொடர்ந்து பேசிய பிரதமர், "ஏழை மக்களை அழிப்பதற்கு கிடைத்த எந்த ஒரு வாய்ப்பையும் காங்கிரஸ் விடவில்லை. ஏழை மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை கொள்ளையடித்தனர். கடந்த 9 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 9 கோடி வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் லட்சக்கணக்கான கர்நாடக மக்கள் பயனடைந்துள்ளனர். ஜல்ஜீவன் திட்டம் மூலம் 40 லட்சம் வீடுகள் குடிநீர் குழாய் இணைப்பு பெற்றுள்ளன" எனக் கூறினார்.
2022ஆம் ஆண்டு இந்தியா முதலீடுகளை ஈர்ப்பதில் சாதனை படைத்துள்ளது. அதன் மூலமும் கர்நாடக மாநிலம் பயனடைந்துள்ளது என்றும் கொரோனா தொற்றின் அச்சுறுத்தலையும் மீறி கர்நாடக மாநிலம் 4 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்திருக்கிறது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
நான் ஏழை மக்களுக்குத் வேண்டிய வளர்ச்சிப் பணிகளைச் செய்வதற்கான முனைப்புடன் செயல்படுகிறேன். ஆனால் காங்கிரஸ் கட்சியோ என்னைக் குழி தோண்டிப் புதைத்துவிட வேண்டும் என்பதில் மும்முரமாக உள்ளது. எப்போதும் அதைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருக்கிறார்கள். மக்களின் ஆசி எனக்கு அரணாக உள்ளது" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.