கேரளா மாநிலம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறது. கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் ரத்து செய்யப்பட்டிருந்த விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. கேரளாவில் கடந்த 2 வாரங்களாக மிக பலத்த மழை பெய்தது. இயற்கையின் ருத்ரதாண்டவத்தால் விடாது மழை பெய்தது. தொடர் மழையால் மாநிலத்தின் 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழ்ந்தது.

மேலும் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 370-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 700-க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர். 1 லட்சம் பேர் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. 

இந்நிலையில் கொச்சி விமான நிலையம் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் கொச்சி கடற்படை தளத்தில் இருந்து இன்று காலை முதல் பயணிகள் விமான சேவை தொடங்கியது. இந்நிலையில் தற்போது ரயில் போக்குவரத்தும் மீண்டும் துவங்கியுள்ளது. நிஜாமுதீன் - எர்ணாகுளம் மங்களா லக்ஷதீப் எக்ஸ்பிரஸ், மங்களூரு - நாகர்கோயில் பரசுராம் எக்ஸ்பிரஸ், ஜாம்நகர் - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ், சோரன்பூர் ரயில் நிலையத்தில் இருந்து லோகமான்யா திலக் -திருவனந்தபுரம் நேத்ரவதி எக்ஸ்பிரஸ் ஆகியன வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.