கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 1000 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
கடந்த 8ம் தேதி கருப்பு பணம் பதுக்குதல், கள்ள நோட்டு புழக்கம் மற்றும் தீவிரவாத செயல்களுக்கு நிதியளிப்பு போன்ற குற்ற செயல்களை தடுக்கும் நோக்கில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். தற்போது இருப்பில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் எனவும் கூறினார்.
இந்த பழைய நோட்டுகளுக்கு பதிலாக கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏற்கனவே இருந்த 1000 ரூபாய் நோட்டுகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டன. ரூ.500, ரூ.2000 புதிய நோட்டுகளை போல 1000 ரூபாய்க்கான புதிய நோட்டுகளும் விரைவில் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பொருளாதார வல்லுனர்களுக்கான மாநாட்டு நேற்று டெல்லியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய பொருளாதார விவகார செயலாளர் சக்திகாந்த தாஸ் இந்த தகவலை தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய 1000 ரூபாய் நோட்டுகள் இன்னும் ஒரிரு மாதங்களில் வெளியிடப்படும். அவை புதிய வண்ணக்கலவை மற்றும் வடிவமைப்புகளில் இருக்கும். மேலும் 100 மற்றும் 50 போன்ற சிறுமதிப்பு நோட்டுகளும் தொடர்ந்து செல்லுபடி ஆகும். இந்த நோட்டுகளிலும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை சேர்த்து விரைவில் புதிய வடிவமைப்பில் வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது’ என்றார்.
