கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பாஜக  கட்சியின் மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த். சிக்கமகளூருவை சேர்ந்த தொழில் அதிபரான இவர் உலகம் முழுவதும் ‘காபி டே’ எனும் பிரபலமான தேநீர் ஓட்டலும், ஏராளமான நிறுவனங்களும் நடத்திவந்தார். பெரும் கடன் சுமை காரணமாக அவர் நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் காஃபி சித்தார்த் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் வருமான வரித்துறையினர் தனக்கு அதிக அளவு தொந்தரவு கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

37 வருட கடின உழைப்புக்கு பிறகு எனது நிறுவனத்தில் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளேன். தொழில்நுட்ப நிறுவனங்களில் 20 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். ஆனாலும் எனது தொழிலை லாபநோக்கத்தில் கொண்டுசெல்வதில் நான் தோல்வி அடைந்துவிட்டேன். இதற்காக என் மேல் நம்பிக்கை வைத்தவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

நான் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அதிகளவில் கடன் வாங்கி இருந்தேன். கடன் கொடுத்தவர்கள் எனக்கு தொல்லை கொடுத்தனர். வருமான வரித்துறையினர் எனக்கு தொந்தரவு கொடுத்தனர். முன்னாள் டி.ஜி. எனது சொத்துகளை முடக்கினார். இதனால் எனக்கு பண நெருக்கடி ஏற்பட்டது.

எனக்கு பின்னர் நான் விட்டுச்செல்லும் தொழிலை வெற்றிகரமாக நடத்துங்கள். எல்லா தவறுக்கும் நான் ஒருவன் தான் காரணம். என்னுடைய ஆடிட்டர், மூத்த அதிகாரிகள் நான் செய்த பணபரிவர்த்தனை பற்றி அறிந்துகொள்ளவில்லை. யாரையும் ஏமாற்ற வேண்டும், தவறான பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பது எனது நோக்கம் இல்லை என அந்த கடிதத்தில் சித்தார் குறிப்பிட்டுள்ளார்.

தொழில் அதிபர் சித்தார்த் 24 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து ரூ.8 ஆயிரம் கோடி கடன் பெற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் சித்தார்த்தின் சொத்து மதிப்பு ரூ.24 ஆயிரம் கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதாவது அவரது கடனைவிட 3 மடங்கு அதிகம் சொத்து உள்ளது.


சித்தார்த் தனது கடன் பிரச்சினை, மனவேதனை, கடன் கொடுத்தவர்களின் தொந்தரவுகள் குறித்து தனது நெருங்கிய நண்பர்களிடம் மட்டும் சொல்லி வருத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

உலகம் முழுவதும் கிளைகளை கொண்டுள்ள தனக்கு சொந்தமான 12 ஆயிரம் ஏக்கர் காபி எஸ்டேட் மூலம் 2015-ம் ஆண்டு ரூ.8,200 கோடி லாபம் ஈட்டி இருந்தார். அதனால் அந்த ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட மிகச்சிறந்த தொழில் அதிபர்களின் பட்டியலில் அவர் சிறப்பிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.