கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை தொடர்ந்து அவரது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு மொத்தம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,34,819 ஆக அதிகரித்துள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை 2,496 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த முதல்வர் எடியூரப்பாவிற்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து, பெங்களூருவில் உள்ள பழைய விமான நிலையம் அருகே இருக்கும் மணிபால் மருத்துவமனையில் எடியூரப்பா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், என்னுடன் கடந்த சில நாட்களாக நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து தனிமைப்படுத்திக் கொண்டு, பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், கர்நாடக  முதல்வர்  எடியூரப்பாவை தொடர்ந்து, அவரது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மகளும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக அமைச்சரவையில் கொரோனாவில் பாதிக்கப்படும் 4-வது உறுப்பினர் எடியூரப்பா ஆவார். இதற்கு முன், வனத்துறை அமைச்சர் ஆனந்த் சிங், சுற்றுலாத் துறை அமைச்சர் டிசி ரவி, வேளாண்துறை அமைச்சர் பி.சி.பாட்டீல் ஆகியோர் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருந்தனர்.