ஒடிசாவில் மருத்துவர்களுக்கு 4 மாத ஊதியம் முன்பணமாக வழங்கப்படும் என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

சீனாவில் பிறப்பிடமான கொரோனா வைரஸ் 180 நாடுகளுக்கு மேல் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு 562-க்கும் அதிகமானோர் பாதிப்பு ஏற்பட்டுள்ளனர். மேலும் இந்தியாவில் கொரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.

கொரோனா தாக்கம் தீவிரமாக இருப்பதால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இரவு பகல் பாராது உழைத்து வருகின்றனர். உலகமே இன்று மருத்துவர்களின் கைகளை நம்பித்தான் இருக்கிறது. இந்நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு 4 மாத சம்பளம் முன்பணமாக வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் ஒப்புதல் அளித்தார்.