ஒரே ஓடுபாதையில் இரண்டு விமானங்கள்! அசால்டாக வேடிக்கை பார்த்த விமானக் கட்டுப்பாட்டு அதிகாரி!
இன்னும் சில வினாடிகள் தவறு நேர்ந்திருந்தால் இரண்டு விமானங்களும் பெரும் விபத்துக்கு ஆளாகி இருக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மும்பை விமான நிலையத்தில் சனிக்கிழமை ஏர் இந்தியா ஜெட் விமானம் புறப்பட்ட ஓடுபாதையில் இண்டிகோ விமானமும் ஒரே நேரத்தில் தரையிறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இன்னும் சில வினாடிகள் தவறு நேர்ந்திருந்தால் இரண்டு விமானங்களும் பெரும் விபத்துக்கு ஆளாகி இருக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக இரண்டு விமானங்களுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், இரண்டு விமானங்களை ஒரே ஓடுதளத்தில் அனுமதித்த விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், இரண்டு விமானங்களும் ஒரே ஓடுபாதையில் காணப்படுகின்றன. ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், இண்டிகோ விமானமும் தரையிறங்கியது. இண்டிகோ விமானம் இந்தூரில் இருந்து மும்பைக்கு வந்து சேர்ந்தபோது, ஏர் இந்தியா விமானம் கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டது.
இந்தூர்-மும்பை விமானத்தின் பைலட் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரியின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றியதாக இண்டிகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"ஜூன் 8, 2024 அன்று இந்தூரில் இருந்து இண்டிகோ விமானம் 6E 6053 மும்பை விமான நிலையத்தில் தரையிறங்க விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி (ஏ.டி.சி.) மூலம் அனுமதி வழங்கப்பட்டது. விமானி ஏ.டி.சி. அளித்த வழிமுறைகளைப் பின்பற்றினார். இண்டிகோவில் பயணிகளின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானது” என்று இண்டிகோ நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவும் தனது விமானம் புறப்பட விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி அனுமதி அளித்ததாகவே தெரிவித்துள்ளது. AI657 ஜூன் 8 அன்று மும்பையிலிருந்து திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டது. ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையில் நுழைவதற்கு ஏர் டிராஃபிக் கன்ட்ரோல் அனுமதி வழங்கப்பட்ட பிறகுதான் ஏர் இந்தியா விமானம் புறப்படத் தொடங்கியது" என ஏர் இந்தியாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.