ஆன்லைனில் பரவும் ஆபாச உள்ளடக்கங்களை அணுகுவதற்கு ஆதார் அட்டை மூலம் வயது சரிபார்ப்பை செயல்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. எச்சரிக்கைகளுக்குப் பிறகு இந்த சரிபார்ப்பைச் செய்யலாம் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஆன்லைனில் கிடைக்கும் ஆபாசமான உள்ளடக்கங்களை அணுகுவதற்கு, ஆதார் அட்டை மூலமாக வயது சரிபார்ப்பைச் செயல்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மாலியா பக்சி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, இது தொடர்பான மனுக்களை விசாரித்தபோது இந்தக் கருத்தைத் தெரிவித்தது.
பொது மக்களுக்கு எச்சரிக்கை
ஆபாசமான உள்ளடக்கம் அனைவருக்கும் உகந்ததாக இருக்காது என்பதைக் குறிக்கும் வகையில், அத்தகைய உள்ளடக்கத்தைக் காண்பிக்கும் முன் எச்சரிக்கை வழங்குவதன் அவசியத்தை நீதிமன்றம் வலியுறுத்தியது.
"ஆபாசமான உள்ளடக்கங்கள் என்பது புத்தகங்கள், ஓவியங்கள் போன்றவற்றிலும் இருக்கலாம். ஆனால், நீங்கள் தொலைபேசியை இயக்கும்போது, நீங்கள் விரும்பாத அல்லது உங்களுக்குக் கட்டாயமாகத் திணிக்கப்படும் ஒன்று வந்தால் என்ன செய்வது?" என்று நீதிபதி பக்சி கேள்வி எழுப்பினார்.
வழக்கமாக எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டாலும், கூடுதல் நடவடிக்கையாக வயது சரிபார்ப்பைச் செய்யலாம் என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் பரிந்துரைத்தார்.
"பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, நிகழ்ச்சி தொடங்குகிறது. ஆனால், நீங்கள் அதைப் பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்வதற்குள், அது தொடங்கிவிடுகிறது. எச்சரிக்கை சில நொடிகள் மட்டுமே இருக்கலாம்... அதன் பிறகு, ஆதார் அட்டையைக் கேட்கலாம். அதன் மூலம் வயது சரிபார்க்கப்பட்டு, பிறகு நிகழ்ச்சி தொடங்கலாம்," என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் கருத்து தெரிவித்தார்.
சோதனை அடிப்படையில் ஒரு திட்டம்
இந்த ஆலோசனைகள் வெறும் உதாரணப் பரிந்துரைகள் என்றும், நீதித்துறை மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் அடங்கிய குழுவுடன் இணைந்து இதற்கான ஒரு தீர்வைக் காண வேண்டும் என்றும் அவர் கூறினார்.
"ஒரு சோதனை அடிப்படையில் ஒரு திட்டம் தொடங்கட்டும். அது கருத்து சுதந்திரத்தைத் தடுக்கிறது என்று தெரிந்தால், அதன்பிறகு அதைப் பற்றிப் பார்க்கலாம். நாம் ஒரு பொறுப்பான சமூகத்தைக் கட்டமைக்க வேண்டும். அது நடந்தால், பெரும்பாலான சிக்கல்கள் தீர்க்கப்படும்," என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
ஆன்லைன் தளங்களில் உள்ள உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவது, அதில் உள்ள ஆபாச நிகழ்ச்சிகளைத் தடுப்பது குறித்த விவாதங்களின் போது உச்ச நீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


