உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கியவர் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய். இவர் மீது நீதிமன்ற பெண் பதிவாளர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் விசாரணையில் இது பொய் புகார் என்று தெரியவந்தது. தற்போது, இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய உள்ள அயோத்தி வழக்கு விசாரணையை நடத்தி வருகிறார்.

கடந்த 2018 அக்டோபர் 3-ம் தேதி முதல் பதவி வகித்து வரும் கோகாய் பதவி காலம் வரும் நவம்பர் மாதம் 17-ம் தேதி நிறைவு பெறுகிறது. அதற்கு முன்னதாகவே அயோத்தி வழக்கின் தீர்ப்பை வழங்க உள்ளார். 

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்க கோரி மத்திய அரசுக்கு ரஞ்சன் கோகாய் கடிதம் எழுதியுள்ளார். தலைமை நீதிபதியின் பரிந்துரையை சட்ட அமைச்சகம் பரிசீலித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும். இதனிடையே, உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நவம்பர் 18-ம் தேதி பதவியேற்கலாம் என்று கூறப்படுகிறது. இவர், 2021-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி அப்பதவியில் நீடிப்பார் என்றும் கூறப்படுகிறது.