அசாம் மாநிலத்தில் வசிக்கும் பிற மாநில மக்களை வெளியேற்றினால் உள்நாட்டுப் போர் வெடிக்கும், என்று மம்தா பானர்ஜி கடுமையாக எச்சரித்துள்ளார். வங்கதேசம் நாட்டில் இருந்தும், மேற்கு வங்கம், பீகார் போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் சட்டவிரோதமான முறையில், அருகில் உள்ள அசாம் மாநிலத்திற்கு ஏராளமானோர் குடியேறி வசிப்பதாக, புகார் கூறப்படுகிறது. இது முறைகேடான செயல்களுக்கு வழிவகுப்பதாக உள்ளதால், முறையான தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வந்தது.
 
இதையடுத்து, அம்மாநில மக்களுக்காக வரைவுப் பதிவேடு ஒன்றை தயாரிக்க, மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதன்படி, தற்போது அந்த வரைவு பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது. அதில், மொத்த மாநில மக்கள் தொகையில், 40 லட்சம் பேரின் பெயர் விடுபட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. இது பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. விடுபட்ட மக்கள் அனைவரும் மேற்கு வங்கம், பீகார் போன்ற அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. குடிமக்கள் பட்டியலில் பெயர் இல்லை என்றால் அந்த மக்களை வெளியேற்றவும் அசாம் மாநில அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.
 
இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேல்கட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில், தலைநகர் டெல்லிக்கு விரைந்துள்ள அவர், தனது கட்சி எம்பி.,க்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதற்கிடையே நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மம்தா பானர்ஜி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘’யார் இந்தியன் என்று முடிவு செய்ய இவர்கள் யார்? பாஜக.,வினர் மட்டும்தான் இந்தியர்கள் என்றும், மற்றவர்கள் இந்தியர் அல்லாதவர்கள் என்றும் மத்திய அரசு பேசிவருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
 
சகிப்புத் தன்மை மற்றும் ஜனநாயகத்திற்கு பெயர் பெற்ற இந்தியாவில், மக்களிடையே பிரிவினைவாதம் ஏற்படுத்துவதில் மத்திய அரசும், பாஜக தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர். இதன்படி, அசாம் மாநிலத்தில் உள்ள பிறமாநில மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்த முயற்சியை உடனே கைவிட வேண்டும். இல்லாவிட்டால், உள்நாட்டுப் போர் வெடிக்கும். பெரும் ரத்தக் களறி ஏற்படும், என எச்சரித்தார். இதற்கு, பாஜக தலைவர் அமித் ஷா பதில் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘’மம்தா பானர்ஜி தேவையின்றி அசாம் மக்களை குழப்பி வருகிறார். வாக்கு வங்கி அரசியல் நடத்துவதை அவர் கைவிட வேண்டும். அவரது பேச்சை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளேன். இதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம்,’’ என்று குறிப்பிட்டுள்ளார்.