மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், குடியுரிமை சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம் தொடர்பாக பதிலளிக்க அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை மதோவை மத்திய அரசு நிறைவேற்றியது. இதை, குடியரசு தலைவர் அதற்கு ஒப்புதல் அளித்ததையடுத்து அது சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், மணிப்பூர், மேற்குவங்கம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கலவரம் வெடித்துள்ளது. 

இந்த குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், அசாமில் ஆளும் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான அசாம் கன பரிஷித் கட்சி, திமுக, மக்கள் நீதி மய்யம்  உள்ளிட்ட 60 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, பி.ஆர்.காவே, மற்றும் சூரிய காந்த் ஆகியோர் அமர்வில் விசாரணை நடைபெற்றது. 

இந்த வழக்கில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.