பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிப்பவர்கள் இந்தியாவின் சொந்த மக்கள் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். அவர்கள் ஒரு நாள் இந்தியர்கள் என்று கூறி நாட்டிற்குத் திரும்புவார்கள் என்றும் அவர் கூறினார்.
''பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) வசிப்பவர்கள் இந்தியாவின் சொந்த மக்கள். ஒரு நாள் அவர்கள் இந்தியர்கள் என்று கூறி நாட்டிற்குத் திரும்புவார்கள்'' என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சிஐஐ மாநாட்டில் பேசினார்.
புதுடெல்லியில் நடைபெற்ற சிஐஐ மாநாட்டில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், பாகிஸ்தானின் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் போது இந்தியா இன்னும் அதிகமாக செய்திருக்க முடியும். 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலின்போது நாம் அதிகாரத்துடன் நிதானத்தைக் கடைப்பிடித்தோம் என்றார்.
மேலும் அவர் அந்த நிகழ்வில் பேசுகையில், ''பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் ஆழமான உணர்வுப்பூர்வமான மற்றும் கலாச்சாரப் பிணைப்பைக் கொண்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் இந்தியாவுடன் நெருக்கமாக உணர்கிறார்கள். ஒரு சிலரே தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். இன்று புவியியல் மற்றும் அரசியல் ரீதியாக நம்மிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கும் நமது சகோதரர்கள், ஒருநாள் இந்தியாவின் முக்கிய நீரோட்டத்தில் இணைவார்கள். அவர்களது சொந்த மண்ணுக்கான ஆன்மாவின் குரலைக் கேட்பார்கள் என்பதில் நாங்கள் முழு நம்பிக்கை கொண்டுள்ளோம்.
"இந்தியா எப்போதும் இதயங்களை இணைப்பது பற்றிப் பேசுகிறது. மேலும் அன்பு, ஒற்றுமை, உண்மையின் பாதையில் நடப்பதன் மூலம், நமது சொந்தப் பகுதியான PoK, நமக்கு திரும்ப கிடைக்கும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை'' என்றார்.
தேசியப் பாதுகாப்பு குறித்து சிங் பேசுகையில், ''இந்தியாவின் 'மேக் இன் இந்தியா' முயற்சியின் கீழ், குறிப்பாக ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு ஏற்பட்ட சாதனைகளைப் பாராட்டினார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி ரூ. 1,000 கோடிக்குக் கீழ் இருந்தது. ஆனால் இப்போது ரூ. 23,500 கோடியாக உயர்ந்துள்ளது.
“ஆபரேஷன் சிந்தூர் நேரத்தில், உள்நாட்டுப் பாதுகாப்பு தளவாட உற்பத்தியின் திறனை முழு நாடும் கண்டது. 'மேக் இன் இந்தியா' என்பது வெறும் வாசகம் அல்ல. அது பாதுகாப்பு மற்றும் செழிப்பு இரண்டிற்கும் ஒரு முக்கிய தேவை என்பதை உலகுக்கு நிரூபித்தோம்.
''இந்தியா போர் விமானங்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகளை உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல், அடுத்த தலைமுறை போர் தொழில்நுட்பங்களிலும் முதலீடு செய்கிறது. இது எதிர்காலத்திற்கு தயாராகவும், பாதுகாப்பில் தன்னிறைவு பெற்ற நாடாகவும் மாறுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டைக் காட்டுகிறது'' என்றார் ராஜ்நாத் சிங்.
