பிரபல சமுக வலைதளமான ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார். காவலன் மோடி என பெயர் மாற்றம் செய்துள்ளார். 

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் தொடர்ந்து ஆர்வத்துடன் செயல்பட்டு வரும் அரசியல் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர். ட்விட்டரில் அதிகமானோர் பின்பற்றப்படும் அரசியல் தலைவர்களில் டாப் 5-ல் உள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட, ’நானும் மக்கள் அனைவரும் காவலாளிதான்’ என்ற வீடியோ டுவிட்டரில் நம்பர் ஒன் டிரண்டிங்காக இருந்தது. நாட்டிற்கு சேவை செய்ய உங்களின் காவலாளியாக நான் இருக்கிறேன்.

நான் தனி ஆளில்லை. ஊழல், அசுத்தம், சமூக கொடுமைகளை எதிர்த்து போராடும் ஒவ்வொருவரும் காவலாளி தான். இந்தியாவின் வளர்ச்சிக்காக கடினமாக உழைக்கும் ஒவ்வொருவரும் காவலாளி தான்’’ எனக் கூறியிருந்தார். பிரதமரின் டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பல ஆயிரம் பேர் லைக் செய்தனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மறு விமர்சனம் செய்தனர். #MainBhiChowkidar டுவிட்டரில் டிரண்டிங் ஆனது. இந்நிலையில் இன்று, டுவிட்டரில் இதுவரை நரேந்திர மோடி என இருந்த தனது பெயரை, "காவலாளி நரேந்திர மோடி" என பெயர் மாற்றம் செய்துள்ளார். தற்போது இந்திய அளவில் ChowkidarNarendraModi என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் முன்னிலையில் இருந்து வருகிறது.

நானும்கூட காவலாளிதான் என்று பிரதமர் மோடியின் வாசகம் இன்று பாஜக தலைவர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. இந்த வார்த்தையை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்திவரும் பாஜக தலைவர்கள் ட்விட்டரிலும் தங்கள் பெயரை மாற்றத் தொடங்கியுள்ளனர்.