திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் முடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்த தடுப்புச்சுவரில் மோதி கார் விபத்துக்குள்ளாது. இந்த விபத்தில் கார் தீப்பற்றியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 

பெங்களூரு ஹென்னூர் லே அவுட் பகுதியை சேர்ந்தவர்கள் ஜான்வி, கலா, பவன், ராம், சாயி அஸ்ரத் மற்றும் விஷ்ணு உள்பட 6 பேர் இரு தினங்களுக்கு முன் காரில் திருப்பதிக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் முடித்துக்கொண்டு நேற்று இரவு திருப்பதியிலிருந்து பெங்களூரு திரும்பிக்கொண்டிருந்தனர். இவர்கள் பயணம் செய்த கார் ஆந்திர மாநிலம், சித்தூர்  மாவட்டம், பலமநேர் மண்டலத்திற்கு உட்பட்ட கங்காவரம் அருகே வந்து கொண்டிருந்தது.

 

அப்போது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடி தடுப்புச்சுவரில் மோதி தூக்கிவீசப்பட்டது. சாலையில் உருண்டபடி சென்று பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது. காரை ஓட்டிச்சென்ற விஷ்ணு அதிலிருந்து வெளியே குதித்து படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இந்த கோர விபத்தில் காருக்குள் இருந்த 3 குழந்தைகள் உள்பட 5 பேர் கொளுந்துவிட்டு எரிந்த தீயில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த விஷ்ணுவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.