இரு மாநிலங்களுக்குள் வரும் சித்ரக்கூட் மாவட்டம்; நிர்வாகம் எப்படி நடக்கிறது?
இந்தியாவில் சித்ரக்கூட் என்ற ஒரு மாவட்டம் உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களின் கீழ் வருகிறது. இந்த மாவட்டத்தின் புவியியல் அமைப்பு மற்றும் நிர்வாகம் தனித்துவமானது, இரண்டு மாநில அரசுகளின் சட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு உட்பட்டது. ராமாயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் இது கருதப்படுகிறது.
நம் இந்தியாவை பொறுத்தவரை அதன் புவியியல், நிலப்பரப்பு, அங்கு வாழும் மக்கள், அவர்களது மொழி, கலாச்சாரம் ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. மாநிலங்களுக்குள் நிர்வாகத்திறனை இலகுவாக்க மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இந்தியாவில் ஒரு மாவட்டம் 2 மாநிலங்களுக்கு உட்பட்டிருக்கிறது என்பது தான் வியப்பே . அந்த மாவட்டத்தின் பெயர் சித்ரக்கூட்.
சித்ரக்கூட்:
மலைகளின் ஆச்சரியம் என அழைக்கப்படும் சித்ரக்கூட் மாவட்டம் உத்தர பிரதேசம் , மத்திய பிரதேசம் என 2 மாநிலங்களுக்கு உட்பட்டு இருக்கிறது. அது மட்டுமின்றி இந்து புராணங்களில் சொல்லப்படும் பல சம்பவங்கள் இங்கு நடந்தேறியதாகவும் நம்பப்பட்டு வருகிறது.
சித்ரக்கூட் மாவட்டம் எப்படி பிரிக்கப்பட்டிருக்கிறது:
சித்ரக்கூட்டின் தனித்துவமே அதன் புவியியல் அமைப்பும் அம்மாவட்டத்தில் நடந்து வரும் நிர்வாகமும்தான். இந்த மாவட்டத்திலுள்ள கர்வி, ராஜாப்பூர், மவு மற்றும் மானக்பூர் ஆகிய நான்கு தாலுக்காக்கள் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு உட்பட்டு வருகின்றன. அதேபோல, இந்த சித்ரக்கூட் மாவட்டத்தின் ஒரு பகுதியான சித்ரக்கூட் நகர் மத்திய பிரதேச மாவட்டத்திலுள்ள சாட்னா மாவட்டத்திற்குள் வருகிறது. இப்படி ஒரே மாவட்டம் இரண்டு மாநிலங்களுக்குட்பட்டு இருப்பதால், ஒரே மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் 2 மாநில அரசுகளால் ஆளப்படுகிறார்கள். எனவே இரண்டு மாநிலங்களுக்கும் அதற்கென இருக்கும் சட்ட ஒழுங்கு, பாலிசிகள், நிர்வாகம் என அனைத்தும் இந்த மாவட்டத்திற்கு பொருந்தும். இருப்பினும் மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் மற்றும் உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இருவரும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால், நிர்வாகத்தில் பிரச்னை இல்லாமல் சீராகவே இருக்கிறது.
சித்ரக்கூட் பிரிக்கப்பட என்ன காரணம் ?
அரசு தரவுகளின் படி, சித்ரக்கூட் மாவட்டம் 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 அன்று பிரிக்கப்பட்டது. உத்தரப் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாவட்டங்களுக்கு உட்பட்டிருக்கும் இந்த மாவட்டம் தனித்துவமாக பார்க்கப்பட முக்கியமான காரணம் அது அமைந்திருக்கும் விந்தியா மலைப் பரப்புதான். சித்ரக்கூட்டின் பெரும்பாலான பகுதி உத்தர பிரதேச மாவட்டத்திலேயே இருக்கிறது.
சித்ரக்கூட்டும் புராணமும்:
இந்தியாவின் பழம்பெரும் புராணமாக கருதப்படும் ராமாயணத்தில் சொல்லப்படும் சம்பவங்கள் சில இங்கு நடந்ததாக கருதப்படுகிறது. அதாவது ராமாயணத்தில் வரும் ராமர் , அவரது சகோதரர் லட்சுமணன் மற்றும் தனது பத்னி சீதையுடன் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றார் . இதில் பதினொன்றரை ஆண்டுகள் ராமர் தனது மனைவி மற்றும் சகோதரருடன் இந்த சித்ரக்கூட் மாவட்டத்தில் தங்கி இருந்ததாக கருதப்படுகிறது. இதனால் இந்த மாவட்டம் புண்ணிய ஸ்தலமாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி ராமர் தனது தந்தைக்கு இறுதி சடங்குகள் செய்த இடமாகவும் இந்த சித்ரக்கூட் மாவட்டம் பார்க்கப்படுகிறது.