தேசிய பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாள் சிபிஐ காவல் விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தேசிய பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாள் சிபிஐ காவல் விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2016ம் ஆண்டு டிசம்பர் வரை தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா இருந்து வந்தார். இந்த நிலையில் இவர், இமயமலையில் வசித்து வந்த சாமியார் ஒருவரிடம் பல்வேறு ஆலோசனைகளை பெற்று நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அவரிடம் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்கள், முன்கூட்டியே கணிப்பு உள்ளிட்டவற்றை பகிர்ந்து கொண்டதாகவும் சித்ரா ராமகிருஷ்ணா மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுமட்டுமின்றி, இமயமலை சாமியார் வழங்கிய ஆலோசனையின் படி, ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை தேசிய பங்குச் சந்தையின் தலைமை திட்ட ஆலோசகராக நியமித்து அவருக்கு பலமுறை ஊதிய உயர்வு வழங்கியதாகவும் சித்ரா ராமகிருஷ்ணா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் தரப்பில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ. 3 கோடி அபராதமும், பங்குச் சந்தை நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு 3 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. மேலும், சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனையும் நடைபெற்றது. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த 25 ஆம் தேதி சிபிஐ, ஆனந்த் சுப்பிரமணியனை சென்னையில் வைத்து கைது செய்தது. இதை அடுத்து சித்ரா ராமகிருஷ்ணா முன்ஜாமீன் கேட்டு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் அகர்வால், சித்ரா ராமகிருஷ்ணாவின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முன் ஜாமீன் மனு தள்ளுபடியானதை அடுத்து சித்ரா ராமகிருஷ்ணாவை சிபிஐ, நேற்றிரவு டெல்லியில் வைத்து கைது செய்தது. அதனை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. தேசிய பங்கு சந்தை மற்றும் செபி அதிகாரிகள் முன் அவரை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரி, 14 நாட்கள் விசாரணை காவலுக்கு அனுமதி அளிக்க கோரி நீதிபதிகளிடம் சிபிஐ முறையிட்டது. இதை அடுத்து சித்ரா ராமகிருஷ்ணாவை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.