அமெரிக்காவின் வர்த்தகப் போர் நடவடிக்கைகளுக்கு மத்தியில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, இந்தியா வந்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Chinese Foreign Minister Wang Yi Arrives In India: இந்தியா, அமெரிக்கா வர்த்தக மோதலின் மத்தியில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, இன்று (ஆகஸ்ட் 18) இந்தியா வந்தார். அவரை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். இருதரப்பு உறவுகள், எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விரிவாகக் கலந்துரையாடினர். இந்தியா, சீனா எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவ வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம் ஏற்படும் என ஜெய்சங்கர் தெரிவித்தார். பதற்றத்தைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயுடன் ஜெய்சங்கர் சந்திப்பு

கடினமான காலகட்டத்திற்குப் பிறகு, இருநாடுகளும் முன்னேற விரும்புகின்றன. இதற்கு இரு தரப்பிலும் தெளிவான மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறை தேவை. பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்திறன் மற்றும் பரஸ்பர நலன் ஆகிய மூன்று அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். கருத்து வேறுபாடுகள் பிரச்சினைகளாக மாறக்கூடாது. போட்டி, மோதலாக மாறக்கூடாது என்றும் ஜெய்சங்கர் கூறினார்.

வெளிநாட்டுத் தலையீடுகள் தவிர்க்கப்பட வேண்டும்

எஸ். ஜெய்சங்கருடனான சந்திப்பிற்குப் பிறகு வாங் யீ கூறுகையில், எல்லைப் பகுதிகளில் அமைதியைப் பேணிக்காத்து வருகிறோம். வெளிநாட்டுத் தலையீடுகளைத் தவிர்த்து, ஒத்துழைப்பை அதிகரித்து, சீனா-இந்தியா உறவுகளை மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் இருநாடுகளின் வளர்ச்சிக்கும், ஆசியா மற்றும் உலக அமைதிக்கும் பங்களிக்க முடியும் என்றார்.

இந்தியாவுக்கு எதிரான டிரம்ப்பின் வரி விதிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய பொருட்கள் மீது மொத்தம் 50% வரி விதித்துள்ளார். அமெரிக்காவுக்கு இந்தியா அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது. ஆனால் அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியாவில் அதிக வரி விதிப்பதாகவும், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இராணுவ தளவாடங்களை அதிக அளவில் வாங்கி ரஷ்யாவின் போர் இயந்திரத்திற்கு நிதியுதவி செய்வதாகவும் கூறி டிரம்ப் இந்த வரி விதிப்பு முறையை மேற்கொண்டுள்ளார்.

இந்தியா பக்கம் நெருங்கி வரும் சீனா, ரஷ்யா

இப்படி இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா திரும்பியுள்ள நிலையில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இந்தியா வந்துள்ளது அமெரிக்காவிற்குப் பெரும் பின்னடைவாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. மேலும் கல்வான் மோதலுக்கு பிறகு இந்தியா, சீனா எல்லையில் பதற்றம் ஏற்பட்ட நிலையில், வாங் யீயின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இப்படியாக இந்தியாவுடன் உறவை வளர்க்க சீனா நெருக்கம் காட்டி வரும் நிலையில், ரஷ்யாவோ இந்தியாவின் உண்மையான நண்பனாக உள்ளது. உக்ரைன், ரஷ்யா மோதல் விவகாரம் தொடர்பாக டிரம்பை சந்தித்து பேசிய ரஷ்ய அதிபர் புதின் உடனடியாக பிரதமர் மோடியை போனில் அழைத்து பேசியுள்ளார். வல்லரசு நாடுகளான சீனாவும், ரஷ்யாவும் இந்தியாவுடன் நெருக்கம் காட்டி வருவது டிரம்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.