கொரோனாவை எதிர்ப்பதில் இந்தியர்களின் உடல் வலிமையையும் மனவலிமையையும் சீனாவின் கொரோனா தடுப்பு நிபுணர் மருத்துவர் சாங் வென்ஹோங் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
சீனாவின் ஷாங்காயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தொற்று நோய் தடுப்பு பிரிவு தலைவராக இருப்பவர் மருத்துவர் சாங் வென்ஹோங். இவர் இந்தியாவில் உள்ள சீன மாணவர்களிடையே காணொலி காட்சி மூலம் உரையாடினார். இதற்கான ஏற்பாட்டை டெல்லியில் உள்ள சீன தூதரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 
இந்த காணொலி காட்சியில் சாங் வென்ஹோங் பேசுகையில், “இந்தியர்கள் அமைதியான மனத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அண்மையில் செய்தி ஒன்றை நான் படித்தேன். அதில் கோயில் திருவிழா ஒன்றில் முகக் கவசம் அணியாமல் மக்கள் கூடிய செய்தியைப் படித்தேன். கொரோனாவை எதிர்ப்பதில் இந்தியர்கள் உடல் வலிமை மட்டுமல்ல, மன வலிமையோடு இருப்பதைக் காண முடிகிறது. 
தற்போது இந்தியாவில் கொரோனா நோயளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. அமெரிக்காவைவிட இந்தியா மக்கள் தொகையில் பெரிய நாடு. ஆனால், அமெரிக்காவைவிட இந்தியாவில் பாதிப்பு மிகவும் குறைவு. இந்திய மக்கள்தொகையில் அதிகபட்சமாக 10 சதவீதம் பேருக்கு மட்டும் கொரோனா நோய் தொற்று ஏற்படலாம். இதர 90 சதவீதம் பேருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது” என்று ஷாங் வென்ஹோங் பேசியுள்ளார்.