கச்சத்தீவு பிரச்சினைக்கு இடையே இந்திய பகுதிகளுக்கு பெயர் வைத்து 4ஆவது லிஸ்ட் வெளியிட்ட சீனா!
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மேலும் 30 இடங்களின் பெயர்களை தங்களது மொழியில் சீனா மாற்றியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்று உரிமை கொண்டாடும் சீனா, அம்மாநிலத்துக்கு ஜங்னான் என்றும் பெயர் சூட்டி அழைத்து வருகிறது.
ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே எல்லை பிரச்சினை நிலவி வரும் நிலையில், அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடுவதும், எல்லையோரங்களில் புதிய கிராமங்களை அமைப்பதும் என சீனா தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இந்தியாவின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்து விட்டதாகவும் தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தின் மீதான தனது உரிமையை நிலைநாட்டும் முயற்சியாக அம்மாநிலத்தில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள மேலும் 30 இடங்களின் பெயர்களை தங்களது மொழியில் சீனா மாற்றியுள்ளது. ஏற்கனவே இதுபோன்று 3 பட்டியல் வெளியான நிலையில், நிர்வாகப் பிரிவுகளை நிறுவுவதற்கும் பெயரிடுவதற்கும் பொறுப்பான சீன சிவில் விவகார அமைச்சகம் தற்போது 4ஆவது பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், நான்கு ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு துண்டு நிலம் என மொத்தம் 30 இடங்களுக்கு சீனா மறுபெயரிட்டுள்ளது. அந்த பெயர்களின் சீன, திபெத்திய, பின்யின், மாண்டரின் சீன மொழியின் ரோமானிய எழுத்துக்கள் உள்ளன.
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படாது - வருமான வரித்துறை!
சீனாவின் ஜாங்னானில் (அருணாச்சலப்பிரதேசம்) உள்ள சில புவியியல் பெயர்களை தரப்படுத்தியுள்ளோம் என நிர்வாகப் பிரிவுகளை நிறுவுவதற்கும் பெயரிடுவதற்கும் பொறுப்பான சீன சிவில் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டில் இருந்து வெளியாகும் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஆறு இடங்களின் பெயர்களை மாற்றி தரப்படுத்தப்பட்ட பெயர்கள் என்று அழைக்கப்படும் முதல் பட்டியலை கடந்த 2017 ஆம் ஆண்டில் சீனா வெளியிட்டது. 2021ஆம் ஆண்டில் 15 இடங்களை கொண்ட இரண்டாவது பட்டியலையும், 2023ஆம் ஆண்டில் 11 இடங்களுக்கான பெயர்களைக் கொண்ட மூன்றாவது பட்டியலையும் சீனா வெளியிட்ட நிலையில், தற்போது 4ஆவது பட்டியலை சீனா வெளியிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கடந்த 1974ஆம் ஆண்டில் நடந்து முடிந்த ஏற்கனவே இலங்கை தாரை வார்க்கப்பட்டு விட்ட கச்சத்தீவு பிரச்சினையை பிரதமர் மோடியும், பாஜகவினரும் எழுப்பி குற்றம் சாட்டி வரும் நிலையில், அண்டை நாடான சீனா தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதும், அதனை தைரியமாக எதிர்கொள்ளாமல் மேம்போக்காக கையாண்டு மத்திய அரசு மவுனம் காத்து வருவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.