டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அதன்பின் தனது பாதுகாப்புபடையுடன் புறப்பட்டபோது, தனது வருகையை எதிர்பார்த்து காத்திருந்து, குழந்தைகள் பக்கம் சென்றார். அவர்களுடன் கைகுலுக்கினார். ஏராளமான குழந்தைகள் பிரதமர் மோடிக்கு சுதந்திர தின வாழ்த்துக்களைக் கூறி மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்காக டெல்லியில் பல்வேறு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை அதிகாலை 4 மணிக்கே அழைத்து வந்து அமர வைத்து இருந்தனர். ஆனால், நிகழ்ச்சி காலை 8.30 மணிக்கு மேல்தான் முடிந்தது, இதனால், ஏறக்குறை 4 மணிநேரம் வரைகுழந்தைகள் காத்திருந்தனர்.

மேலும், 17நூற்றாண்டு செங்கோட்டையின் முன், பல்வேறு  பள்ளிகளைக் சேர்ந்த குழந்தைகள்  இந்தியா போன்று தோற்றத்தில் நின்று இருந்தனர். சில குழந்தைகள் கிருஷ்ணர் போன்று வேடம் அணிந்து வந்திருந்தனர்.

பிரதமர் மோடி குழந்தைகளுக்கு கை கொடுத்துவிட்டு செல்லும் போது, குழந்தைகள் ஆர்வமிகுதியால், ஏராளமான குழந்தைகள் மீண்டும் கை கொடுக்க ஆசைப்பட்டு வந்தனர். இதனால் திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது  பாதுகாப்புபடை வீரர்கள் தலையிட்டு, குழந்தைகளை அப்புறப்படுத்தி மோடியை பத்திரமாக காருக்கு அழைத்துச் சென்றனர். இதனால், பிரதமர் மோடியிடம் கைகொடுக்க நினைத்த குழந்தைகள் பலர் ஏமாற்றமடைந்தனர்.