Asianet News TamilAsianet News Tamil

11 வயதில் குழந்தை திருமணம்: நீட் தேர்வில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் இளைஞர்!

குழந்தை திருமணம் செய்து கொண்ட ராஜஸ்தான் மாநில இளைஞர் ஒருவர் நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்

Child marriage at 11 years rajasthan youth cracked neet exam in 5th attempt
Author
First Published Jun 18, 2023, 11:39 AM IST

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்தே, கஷ்டமான சூழ்நிலைகளில் படித்து வெற்றி பெற்ற பல மாணவர்களின் சாதனை கதைகள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இணைந்துள்ளார் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர்.

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டம் கோசுண்டா கிராமத்தை சேர்ந்த ராம்லால் எனும் இளைஞர், தனது ஐந்தாவது முயற்சியில் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அவரது குடும்பத்தில் முதல் மருத்துவராகும் பெருமையையும் அவர் பெறவுள்ளார்.

ராம்லாலின் தந்தை இன்னொருவரின் பண்ணையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். அவரது தாயார் தீவனம் விற்கும்  தொழிலில் ஈடுபட்டுள்ளார். இத்தகைய கஷ்டமான சூழ்நிலையிலும், மருத்துவராக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ராம்லால், 632 மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ராம்லாலுக்கு திருமணமாகும்போது அவரது வயது 11. ஆறாம் வகுப்பு படிக்கும்போது அவருக்கு திருமணம் ஆகியுள்ளது. இந்தியாவில் குழந்தை திருமண ஒழிப்புக்கென பல்வேறு கடுமையான சட்டங்கள் இருந்தாலும், குழந்தை திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதற்கும் சாட்சியாக ராம்லால் இருக்கிறார்.

குழந்தை திருமணம் நடைபெற்றாலும், தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதில் ராம்லால் உறுதியாக இருந்துள்ளார். அவரது மனைவியும் அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளார். ராம்லால் தனது கல்வியை தொடர்ந்து கற்க அவரது தந்தை முதலில் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. ஆனால், அவரது விருப்பத்தை அறிந்து அதன்பிறகு ஒத்துழைப்பு தந்துள்ளார்.

ராம்லாலின் மனைவி 10ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். அவரும் கூட முதலில் ராம்லாலின் விருப்பத்துக்கு தடையாக இருந்துள்ளார். ஆனால், கல்வி குறித்து ராம்லால் எடுத்துக்கூறியவுடன் அவரது மனைவி அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.

அமித் ஷாவை விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுபுங்கள்: சுப்ரமணியன் சுவாமி!

ராம்லால் அவரது கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தனது படிப்பை முடித்துள்ளார். 10ஆம் வகுப்பில் 74 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற அவர், விவசாயம் தொடர்பான படிப்பை 11ஆம் வகுப்பில் எடுக்க திட்டமிட்டிருந்தார். அதன்பிறகே அவருக்கு நீட் பற்றி தெரியவந்துள்ளது. இதையடுத்து, அறிவியல் பாடத்தை எடுத்து படித்த அவர், நீட் தேர்வுக்கும் தயாராகி வந்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டில் பன்னிரெண்டால் வகுப்பு முடியும் தருவாயில் முதன்முதலாக நீட் தேர்வு எழுதிய ராம்லால், 350 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். 2020ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக தேர்வெழுதி 320 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மூன்றாவது முறையாக 2021ஆம் ஆண்டில் நீட் தேர்வெழுதிய அவர், 362 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்த மூன்று முறையும் அவராகவே நீட் தேர்வுக்கு பயின்று வந்துள்ளார்.

இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்துள்ளார். அவருக்கு ஆசிரியர்கள் உதவி புரிந்துள்ளனர். தொடர்ந்து 2022ஆம் ஆண்டு நான்காவது முறையாக நீட் தேர்வு எழுதிய ராம்லால், 490 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இருப்பினும், மனம் தளராமல் ஐந்தாவது முறையாக நடப்பாண்டான 2023இல் நடைபெற்ற நீட் தேர்வை எழுதிய ராம்லால், 632 மதிப்பெண்கள் எடுத்து தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சேரவுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios