எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையில், கேரள சட்டப்பேரவையில் சோலார் பேனல் ஊழல் வழக்கின் அறிக்கையை முதல் அமைச்சர் பினராயி விஜயன் தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய அவர், ‘‘முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மற்றும் அவரது உதவியாளர்களும், மோசடியில் சரிதா நாயருக்கு உதவியது தெரிய வந்து இருப்பதாக’’ கூறினார்.

சிவராஜன் கமிஷன்

கேரளாவில் முந்தைய உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தின்போது வீடுகளுக்கு சோலார் பேனல் பொருத்தும் திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நிகழ்ந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாரிக்க 2013 அக்டோபர் 23-ல் ஓய்வுபெற்ற நீதிபதி சிவராஜன் கமிஷன் அமைக்கப்பட்டது.

கேரள முதல்வராக இருந்த உம்மன் சாண்டி அலுவலகத்துக்கு சரிதா நாயரின் நிறுவனம் ரூ.2.16 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. முன்னாள் மின் துறை அமைச்சர் ஆர்யாடன் முகமதுக்கும் லஞ்சம் கொடுத்ததாக சரிதா நாயர் கூறி இருந்தார்.

பாலியல் தாக்குதல்

இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன், 4 பாகங்களை கொண்ட 1000 பக்க அறிக்கையை சில வாரங்களுக்கு முன்பு, கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் சமர்ப்பித்து இருந்தார். இந்த அறிக்கையை சட்டசபயைில் தாக்கல் செய்து பேசிய அவர் மேலும் கூறியதாவது-

உம்மன் சாண்டி, எர்ணாகுளம் எம்.எல்.ஏ.ஹைபி ஈடன், ஆர்யாடன் முகமது, அடூர் பிரகாஷ், ஏ.பி. அனில்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள், காங்கிரஸ்(மாணி பிரிவு) தலைவர் ஜோசப் கே.மாணி, மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோர் சரிதா நாயருக்கு பாலியல் தாக்குதல் தொடுத்ததாகவும் கமிஷன் கூறி உள்ளது.

ஏ.டி.ஜி.பி. விசாரணை

சரிதா நாயர் கமிஷனிடம் தாக்கல் செய்த கடிதத்தில் இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன. காங்கிரஸ் தலைவர்களின் மீதான இந்த ‘செக்ஸ் ஆதாய’ நிர்பந்தம் குறித்து விசாரணை நடத்தப்படும்.

கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராஜேஷ் திவான், இந்த புதிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவார்.

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

எதிரக்கட்சி (காங்கிரஸ்) தலைவர் ரமேஷ் சென்னிதாலா பேசும்போது, இடதுசாரி முன்னணி அரசின் தூண்டுதல் காரணமாக இந்த விசாரணை அறிக்கை மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக காங்கிரஸ் சட்டபூர்வமாக போராடும்.

முதல்-அமைச்சர் பினராயி விஜயன் அறிக்கை தாக்கல் செய்ததும், காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து. இந்த சிறப்பு சட்டசபை கூட்டம் உடனடியாக ஒத்தி வைக்கப்பட்டது.