கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அம்மாநில துணை சபாநாயகரும், பாஜக மூத்த தலைவருமான மைக்கேல் லோபோ தகவல் தெரிவித்துள்ளார். இது கோவா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவா  முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்தாண்டு ஜனவரி மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதன்பின்னர் டெல்லி,  நியூயார்க் கோவாவில் உள்ள மருத்துவமனைகளில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  இந்நிலையில் அவர் கடந்த 30-ம் தேதி, மூக்கில் குழாய்  பொருத்தியபடி, கோவா சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

 

கடந்த வாரம் சிகிச்சைக்காக  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட அவரை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி சூகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். 

இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மனோகர் பாரிக்கரை சந்தித்து நலம் விசாரித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவா துணை சபாநாயகரும், பாஜக மூத்த தலைவருமான மைக்கேல் லோபோ, அவரது நோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. கடவுளின் ஆசியால், அவர் உயிர் வாழ்கிறார். பதவியில் இருந்து அவர் விலகினால் அல்லது அவருக்கு ஏதாவது நேர்ந்தால், கோவாவில் அரசியல் குழப்பம் ஏற்படும்," என்றார்.