தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடுவதற்கும், தமிழகத்தைக் காப்பாற்றவும் நாங்கள் அணை கட்டவில்லை என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக முதல்வர் குமாரசாமி தான் முதல்வராகப் பதவியேற்ற பிறகு 82 நாள்களில் சுமார் 40 கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். 

கடந்த 2 நாட்களாகக் கர்நாடக மாநிலத்தைச் சுற்றியுள்ள சில கோயில்களுக்கு அவர் குடும்பத்துடன் சென்று வருகிறார். நேற்று முன் தினம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதா கோயிலுக்குச் சென்றார். இதையடுத்து புத்தூர் அருகே உள்ள குக்கே சுப்ரமணியா கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அங்குக் கோயில் நிர்வாகம் சார்பில் முதல்வருக்குச் சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த வருடம் கர்நாடகாவில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து  விடப்பட்டுள்ளது. ஆனால் இதே போன்று எப்போதும் தண்ணீர் திறந்து விட வேண்டும் எனத் தமிழக அரசு, காவிரி மேலாண்மை வாரியத்திடம் மனு அளித்துள்ளது. 

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடவா அணையை கட்டியுள்ளோம். இது கர்நாடக மக்களின் வரிப்பணத்தில் கட்டியது. தேவையில்லா மோதல்களுக்கு  வாய்ப்பு அளிக்கக்கூடாது. தமிழக அரசின் கோரிக்கையை மேலாண்மை வாரியம் நிராகரிக்க வேண்டும் என்று கூறினார். மேகதாதுவில் புதிய அணை கட்ட அனுமதி கோரியுள்ளோம்.  அனுமதி கிடைத்தால் மாநிலத்தில் கூடுதல் தண்ணீர் சேகரித்து வைக்கமுடியும் என குமாரசாமி பேட்டியளித்துள்ளார்.