Chief Minister condemned anchor! Do you know

புதுவை முதலமைச்சர் நாராயணசாமியை அழைப்பதற்கு பதிலாக, முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமியை அழைத்த தொகுப்பாளினை நாராயணசாமி கண்டித்த சம்பவம் நடந்துள்ளது.

கிராமப்புற பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியருக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை புதுவை அருகே உள்ள தவளகுப்பம் கிராமத்தில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இன்று துவக்கி வைத்தார். புதுவை முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 750-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்களும் கலந்து கொண்டனர். வகுப்பு மின்னணுவியல், தொலைத்தொடர்பு, சூரிய மின்னாற்றல், சுற்றுச்சூழல் தொழில்நுட்பம், பிளாஸ்டிக் தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் வீட்டு மின்னிணைப்பு ஆகிய பல்வேறு பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

திறன் மேம்பாட்டு கழகத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் பெண்கள் தங்களின் பொருளாதார உயர்வுக்கு வழிவகுக்கலாம். திறன் மேம்பாட்டு கழகத்தின் பயிற்சி சான்றிதழ் மூலம், முத்ரா வங்கியில் கடன் வசதி பெறவும் வசதி உள்ளது. பிணையில்லாத கடன் பெறவும் அதாவது ஐந்தாயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் வசதி பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது.

முன்னதாக புதுவை முதலமைச்சர் நாராயணசாமியை, உரையாற்ற அழைத்த தொகுப்பாளினி தவறுதலாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரும், எதிர்கட்சி தலைவருமான ரங்கசாமியை அழைத்து அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அதாவது முதலமைச்சர் ரங்கசாமி உரையாற்ற அழைப்பதாக அவர் தவறுதலாக குறிப்பிட்டார். பின்னர் சுதாரித்துக் கொண்டு, முதலமைச்சர் நாராயணசாமியை அழைத்தார். 

பின்னர் மேடைக்கு வந்த முதலமைச்சர் நாராயணசாமி, தொகுப்பாளினியிடம் சென்று, தவறுதலாக கூறியது பற்றி கண்டித்தார். இதன் பின்னரே அவர் உரையாற்றினார். இந்த சம்பவம் அங்கு சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.