கடந்த 2007ம் ஆண்டு கோரக்பூரில் நடந்த கலவரம் தொடர்பாக முதல்வர் ஆதித்யநாத் மீது வழக்கு தொடர அனுமதி அளிக்க முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச அரசு தெரிவித்தது.

கடந்த 2007ம் ஆண்டு கோரக்பூர் தொகுதியில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. அந்த கலவரத்தில் சர்சைக்குரிய வகையில் பேசியதாக பா.ஜனதா எம்.எல்.ஏ. ராதா மோகன்தாஸ் அகர்வால், மேயர் அஞ்சுசவுத்ரி உள்ளிட்ட  பலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய பர்வேஸ் பர்வாஸ் என்பவர் இந்த வழக்கை சுயமாக விசாரணை செய்யும் அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும், முதல்வர் ஆதித்யநாத் மீது வழக்கு தொடர அனுமதிக்க கூறி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரமேஷ் சின்ஹா, உமேஷ் சந்திரா வஸ்தவா ஆகியோர் முன்னிலையில் கடந்த 7-ந்தேதிவிசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நக்விவாதிடுகையில், “ யோகி ஆதித்யநாத் ஒரு தனியார் டி.விக்கு அளித்த பேட்டியில், சர்ச்சைக்குரிய வகையில பேசியதால், கோரக்பூர் கலவரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்று கூறியுள்ளார். இந்த வீடியோ யூடியூப்பில் இருக்கிறது. இந்த வீடியோவை அடுத்த விசாரணையின் போது, கொண்டுவரக் கூறி நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும், ஆதித்யநாத்திடம் விசாரணை நடத்தவும் உத்தரவிட வேண்டும், ஏன் அவரிடம் விசாரிக்க சம்மன் அனுப்பவில்லை என அரசிடம் விளக்கம் கேட்க வேண்டும்’’ எனக் கூறினார்.

இந்நிலையில், உத்தரப்பிரதேச தலைமைச் செயலாளர் ராகுல்பட்நாகர் இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் ஒன்றை நேற்று தாக்கல் செய்தார்.

அதில், “ கோரக்பூர் கலவரம் தொடர்பாக முதல்வர் ஆதித்யநாத் மீது விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. விரைவில் அது தொடர்பான அறிக்கையை விசாரணை நீதிமன்றத்தில் அளிப்போம்’’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாநில அரசின் பிரமாண பத்திரத்தை எதிர்த்து மனுத்தாக்கல் செய்ய அனுமதி அளிக்க கோரினர். இதையடுத்து, ஜூலை 7-ந்தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதிகள், பதில்மனுத் தாக்கல் செய்யவும் அனுமதி அளித்தனர்.