ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால் நாட்டின் பொருளாதாரத்தில் ரூ.1.50 லட்சம் கோடி அதாவது, பொருளாதார வளர்ச்சியில் ஒரு சதவீதம் முதல் 2 சதவீதம் வரை இழப்பு ஏற்படும் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். 

ரூபாய் நோட்டு தடையை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில், ஜன் வேதனா என்ற தலைப்பில் ஒருநாள் தேசிய மாநாடு நேற்று நடந்தது.

இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கல் பலர் கலந்கு கொண்டு பேசினர். முன்னாள் நிதி அமைச்சரும், மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது-ரூ.1.50 லட்சம் கோடி இழப்பு
பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. பொருளாதார வளர்ச்சியில் குறைந்தபட்சம் ஒரு சதவீதம் அதிகபட்சமாக 2 சதவீதம் வரை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மதிப்பின் அடிப்படையில் ரூ.1.50 லட்சம் கோடிக்கு இழப்பு ஏற்படலாம். தனி நபர் ஒருவரின் முடிவால், நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

முதல் ஊழல்

ரூபாய் நோட்டு தடை அறிவிப்பின் மூலம்  கருப்புபணம், ஊழலை குறிவைப்பதற்கு பதிலாக, இந்த அரசு ஏழை மக்களை குறிவைத்துவிட்டது. ரூபாய் நோட்டு தடைக்கு பின், புதிய ரூ.2 ஆயிரம் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்ட உடன் 
முதல் ஊழல் வழக்கு குஜராத் மாநிலத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

45 கோடி மக்கள்
மோடி அரசின் ரூபாய் நோட்டு தடையால் கடந்த 50 நாட்களில் வங்கியில் பணம் எடுக்க காத்திருந்து உயிரை இழந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்களுக்கு இழப்பீட்டை யார் கொடுப்பது?. இதில் உயிர் இழந்த தினக்கூலித் தொழிலாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் .  கடந்த 70 நாட்களில் நாட்டில் 45 கோடி மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 

எப்படி நம்பியது?

ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு வெளியிடுவதற்கு முன் அமைச்சரவைக் கூட்டம் நடந்ததாக கூறுகிறீர்கள். அது குறித்து  ஏதேனும் அறிக்கைவௌியிடப்பட்டதா? கூட்டம் நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இருக்கிறதா?. ரூபாய் நோட்டை தடை செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் ஆலோசனையை ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டது என்று மத்திய அரசு எப்படி நம்பியது?.

நன்கொடையை தடுக்க முடியுமா?

பணம் இல்லா பொருளாதாரம் என்று மோடி கூறி வருகிறார். நான் அவருக்கு சவால் விடுகிறேன். அடுத்தவரும் மே, ஜூன் மாதங்களில் பொறியியல், மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்படும்போது கட்டாய நன்கொடை வாங்கப்படும். பெற்றோர்கள் எல்லாம் கவலைப்படாதீர்கள், நன்கொடை வாங்காமல் தடுப்பேன் என்று மோடி உறுதி கூறமுடியுமா?. நன்கொடை வசூலிக்கப்படாது என்று கூறமுடியுமா? அந்த உறுதியை அளிக்க முடியுமா? 

சாத்தியமில்லை

உலகில் எங்குமே நடைமுறையில் இல்லாத பணமில்லா பொருளாதாரத்தை பற்றி மோடி பேசி வருகிறார். இது குறித்து முடிவு செய்ய அவருக்கு உரிமை இல்லை. சர்வதேச சூழலை பார்க்க வேண்டும். அமெரிக்காவில் 42 சதவீதமும், பிரான்சில் 56 சதவீதமும், இந்தியாவில் 96 சதவீதமும் பணப்பரிமாற்றமும் இருக்கிறது. மக்கள் பணமாகவோ அல்லது கார்டுகள் மூலமோ பொருட்கள் வாங்க உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.