பாரதிய ஜனதா அரசு தாக்கல் செய்த 2017-18ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில், இளைஞர்களுக்கு எந்தவிதமான வேலைவாய்ப்பும் உருவாக்கித் தரவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 1-ந்தேதி 2017-18ம் ஆண்டுக்கான பொது மற்றும் ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அந்த பட்ஜெட் குறித்து ஆய்வு செய்ய, சென்னையில் உள்ள லயாலோ கல்லூரியின் சார்பில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது-
நாட்டில் உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை தேடி அலைந்து கண்ணீர் விடுகிறார்கள். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான எந்த அறிவிப்பும் இல்லை. இளைஞர்கள், பெற்றோர்களின் கவலையை மத்தியஅரசு கவனத்தில் கொள்ளவில்லை.

ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்ட போது, அந்த தடையை நீக்கக் கோரி ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் மெரீனாவில் கூடி போராட்டம் நடத்தினார்கள். நீங்கள் கூட்டத்தை மட்டும் பார்க்க கூடாது. அந்த கூட்டத்தை ஆழமாகப் பார்த்தால், அதில் கோபம் தெரியும், வெறுப்பு தெரியும், எதிர்காலம் குறித்த பயம் தெரியும்.
இளைஞர்கள் பிரிவினையை நினைத்து கவலை கொள்கிறார்கள், மதரீதியாக பிரித்தாழ்வதை நினைத்து வேதனைப்படுகிறார்கள், இரு குழுக்களாக பிரிக்கப்படுவது குறித்து வருத்தப்படுகிறார்கள், சகிப்பின்மையை நினைத்து மனம் புழுங்குகிறார்கள்.
நீ இதைத்தான் சாப்பிட வேண்டும்; இதை சாப்பிடக் கூடாது; இந்த ஆடையைத் தான் உடுத்த வேண்டும்; நீ இவர்களைத் தான் அன்பு செய்ய வேண்டும்; நீ இவர்கள் மீது அன்பு செலுத்தக்கூடாது; நீ குறிப்பிட்ட பிரிவினரை திருமணம் செய்யக்கூடாது; இவர்களைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை நினைத்து கவலைப்படுகிறார்கள்.
நூல்கள், எழுத்தாளர்கள், மாட்டிறைச்சி, ஜூன்ஸ் பேண்ட் எனஅனைத்துக்கும் தடை. இந்த விசயங்களை நினைத்து இளைஞர்கள் கவலை கொள்கிறார்கள். அவர்களுக்கு இடையே வேலைவாய்ப்பு தான் வேதனை கொள்ளும் விசயமாக இருக்கிறது. ஆனால், வேலைவாய்ப்பு எங்கே இருக்கிறது?

வேலைவாய்ப்புக்கு பட்ஜெட்டில் என்ன திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஒன்றும் இல்லை. புதிய வேலைவாய்ப்பை உருவாக்க திட்டங்கள் இல்லை, கொள்கைகளும் வகுக்கப்படவில்லை.
பட்ஜெட்டில் நேரடி வரிகளைக் குறைத்ததற்கு பதிலாக மறைமுக வரிகளை குறைத்து இருக்க வேண்டும். மறைமுக வரிகளை குறைக்கும் போதும், பொருட்களின் உற்பத்தி செலவு குறைந்து, விலை சீரடையும், தேவை தூண்டப்படும்.
நேரடி வரிகள் குறைப்பு தேவையை தூண்டாது. மறைமுகவரியை குறைத்தால், அனைத்து விதத்தில் பலன்களை எதிர்பார்த்து இருக்கலாம். மறைமுக வரியை குறைக்காமல், நேரடி வரியை குறைத்து மத்தியஅரசு பெரிய தவறு செய்து விட்டது.
இந்த நேரடி வரி குறைப்பால், சராசரியாக ரூ.5 ஆயிரம் மட்டுமே பலன் பெறுவார்கள், அதிலும், 1.98 கோடி வரி செலுத்துவோர்கள் மட்டுமே பலனடைவார்கள்.
ரூபாய் நோட்டு தடை உத்தரவால், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு, குறு தொழில்கள், பணத்தட்டுப்பாட்டால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். ரூபாய் நோட்டு தடை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவறான முடிவு. கடந்த பல ஆண்டுகளாக எந்த வளர்ந்த நாடுகளும் ரூபாய் நோட்டு தடையை முடிவை எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
