திகார் சிறையில் தனக்கு சிறை உணவுக்கு பதில், வீட்டு உணவு வழங்க அனுமதிக்க வேண்டும் என கூறி ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ நீதிமன்ற உத்தரவை அடுத்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் உள்ளார். இதையடுத்து, வரும் 3-ம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட உள்ளார். 

இந்நிலையில், சிபிஐயின் கைது நடவடிக்கைக்கு எதிராக ப.சிதம்பரம் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. மேலும், ப.சிதம்பரம் முன்னாள் நிதியமைச்சர் மற்றும் தற்போதைய எம்.பி. என்பதை அடிப்படையாக கொண்டு அவருக்கு எந்த தனி சலுகைகளையும் நீதிமன்றத்தால் வழங்க முடியாது. இதில் அவர் வெளியே இருந்தால் வழக்கு தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும் அழிக்கக்கூடும் என்ற சிபிஐ தரப்பு கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது என நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், நீதிமன்ற காவலில் உள்ள ப.சிதம்பரம் சிறை உணவுக்கு பதிலாக வீட்டில் தயாரித்த உணவு அனுமதிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.