Chhattisgarh CM Raman Singhs daughter in law gives birth in state hospital

கடந்த இரு நாட்களுக்கு முன்னர் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிகழ்வு, ஒரு மாநில முதல்வருக்கு அரசு மருத்துவமனையில் பேத்தி பிறந்த நிகழ்வுதான். இது சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த ஆச்சரியம்! 

சத்தீஸ்கர் முதல்வர், ரமண் சிங்கின் மருமகளுக்கு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்ததுதான் மாநிலத்தில் அன்றைய ஆச்சரியம்.

சத்தீஸ்கரில் பா.ஜ.க,வைச் சேர்ந்த ரமண் சிங் முதலமைச்சராக உள்ளார். இவரது மருமகள் ஐஸ்வர்யா, ராய்ப்பூரில் உள்ள அம்பேத்கர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கே அழகான பெண் குழந்தை பிறந்தது. 

அப்போது, முதல்வர் ரமண் சிங், ஐஸ்வர்யாவின் கணவரும் எம்.பி.,யுமான அபிஷேக் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் இருந்தனர். 

தன் மருமகளுக்கு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது குறித்து 'டுவிட்டர்' பதிவுமூலம் தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். தன் பேத்தியை கையில் பிடித்தபடி தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டிவிட்டர் பதிவில் ரமண் சிங் பகிர்ந்துகொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இப்படி, ஆளும் தரப்பு மற்றும் அரசியல் வாதிகள், அதிகாரிகள் தங்களது சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளையும், தங்கள் குழந்தைகளின் கல்விக்கு அரசுப் பள்ளிகளையும் நாடினால் பொதுமக்கள் மத்தியில் அவற்றைப் பயன்படுத்துவதற்கு அதிகம் ஆதரவு காணப்படும். அரசின் திட்டங்கள் சரியாக மக்களுக்குப் போய்ச் சேரும் எனும் கருத்துகளை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

அண்மையில் நம் தமிழகத்திலும் இப்படி ஓர் அரசியல்வாதி, அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று பரபரப்பை ஏற்படுத்தினார். அவர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன். அவர், தானே ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சைப் பெற்றார்.

அது பற்றி அவர் கூறியபோது, “ பாரத மாதா கோவில் ஒன்றை தமிழக அரசே கட்ட வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறேன். இந்தக் கோரிக்கையை தமிழக அரசிடம் முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து வந்தேன். 

தருமபுரியில் நான் உண்ணாவிரதம் இருந்துவந்தபோது மாவட்ட அளவிலான அதிகாரிகள் என்னிடம் வந்து உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கோரினர். நான் மறுத்தபோது கைது செய்வோம் என எச்சரிக்கை விடுக்கப் பட்டது. ஆனால், என் போராட்டத்தில் உறுதியாக இருந்தேன். 

ஆனால், ஒரு நாள் திடீரென என்னை ஆம்புலன்ஸில் ஏற்றி தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து நான் வசித்துவரும் ராயப்பேட்டையில் உள்ள என் வாடகை வீட்டில் வந்து என்னை விட்டுச் சென்றனர். தொடர் உண்ணாவிரதம், அலைச்சல் காரணமாக உடல் நலமில்லாததால் இந்த அரசு மருத்துவமனைக்கே சிகிச்சை பெற வந்தேன்” என்றார். 

இத்தகைய வழிமுறைகளை அதிகாரிகளும் பின்பற்றுவார்களா என்பதுதான் பலரின் கேள்வி!