பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா நேரில் சந்தித்து வாழ்த்து  பெற்றார்

உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன், 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டரும், சென்னையை சேர்ந்தவருமான பிரக்ஞானந்தா களம் கண்டார்.

இந்த ஆட்டத்தின் முடிவில், உலகக் கோப்பை செஸ் சாம்பியன் பட்டத்தை மேக்னஸ் கார்ல்சன் வென்றார். அவருக்கு மிகப்பெரும் சவால் கொடுத்த பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்தார். உலக ஜாம்பவான்களுடன் மோதி இறுதிப் போட்டி வரை களம் கண்டு, அதிலும் முதல் நிலை வீரரான கார்ல்சனுக்கு கடும் சவால் கொடுத்து, போராடி தோல்வியடைந்த பிரக்ஞானந்தாவுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா தனது பெற்றோருடன் நேரில் சந்தித்தார். அப்போது, உலகக் கோப்பை செஸ் தொடர் தான் பெற்ற பதக்கத்தையும், சான்றிதழையும் பிரதமர் மோடியிடம் காண்பித்து பிரக்ஞானந்தா வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மற்றும் அவரது பெற்றோருடன் பிரதமர் மோடி சிறிது நேரம் கலந்துரையாடினார்.

யார் இந்த ஜெயா வர்மா சின்ஹா? ரயில்வே வாரிய வரலாற்றில் முதல் பெண் தலைவர்!

இந்த சந்திப்பு குறித்துய் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “பிரக்ஞானந்தாவை அவரது குடும்பத்துடன் சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய இளைஞர்களுக்கு உதாரணமாக திகழும் பிரக்ஞானந்தாவின் ஆர்வமும், விடாமுயற்சியும் இந்தியாவின் இளைஞர்கள் எந்த களத்தையும் எப்படி கைப்பற்ற முடியும் என்பதை காட்டுகிறது. உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

உங்களை சந்தித்து பேசியது மகிழ்ச்சியாக இருந்தது என தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடியுடனான சந்திப்பு பற்றி பதிவிட்டுள்ள பிரக்ஞானந்தா, “பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்தது பெருமையாக இருந்தது. என்னையும் என் பெற்றோரையும் ஊக்கப்படுத்தும் அவரது அனைத்து வார்த்தைகளுக்கும் நன்றி.” என தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

முன்னதாக, உலகக் கோப்பை செஸ் போட்டித் தொடரில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்ற பிரக்ஞானந்தா நேற்று காலை சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலினின் முகாம் இல்லத்துக்கு நேரில் சென்று சந்தித்து பிரக்ஞானந்தா வாழ்த்து பெற்றார். செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை ஊக்கப்படுத்தும் வகையில் அவருக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் ஸ்டாலின் அப்போது வழங்கினார்.