சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை இடைக்காலமாக நீக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

சென்னை- சேலம் 8 வழிச்சாலையை திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சுமார்  277 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட உள்ள இந்த 8 வழி சாலைக்கு காஞ்சிபுரம், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து, விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக ஏ.பி.சூரியப்பிரகாசம், எம்.பி அன்புமணி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். இந்நிலையில், பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. 

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கும் வரை, 8 வழிச்சாலை பணியை துவங்க மாட்டோம். சாலை அமைப்பது போன்ற எந்த பணிகளும் நடக்காது என மத்திய அரசு உறுதி அளித்தது. மேலும், சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை இடைக்காலமாக நீக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டியிருப்பதால் வழக்கை ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.