changes in rail tickets

பண்டிகை காலங்களில் அதிக விலைக்கும் சாதாரண நாட்களில் சலுகை விலைக்கும் ரயில் டிக்கெட்டுகள் விற்பனை செய்வது குறித்து ரயில்வே துறை பரிசீலனை செய்துவருகிறது.

தீபாவளி, ஆயுத பூஜை, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ரயில் டிக்கெட்டுகளை அதிக விலைக்கும், சாதாரண நாட்களில் சலுகை விலைகளிலும் விற்பது குறித்து ரயில்வே வாரியம் ஆலோசனை செய்துவருகிறது. கூட்டம் அதிகம் இல்லாத ரயில்களில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட சேவைகளின்போது பயணிகளுக்கு சலுகைகள் அளிப்பது குறித்தும் ரயில்வே வாரியம் ஆலோசனை செய்துவருகிறது.

இதுதொடர்பாக ரயில்வே வாரிய உயரதிகாரிகளுடன் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கடந்தவாரம் ஆலோசனை நடத்தியுள்ளார். ரயில் டிக்கெட்டுகளில் பல்வேறு சலுகைகள் வழங்குவது குறித்து அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தால், டிக்கெட்டுகளின் விலையில் அந்தந்த சீசனுக்கு ஏற்றாற்போல் மாற்றம் இருக்கும் என கருதப்படுகிறது. இதுதொடர்பாக கிழக்கு, மேற்கு, மற்றும் மேற்கு மத்திய ரயில்வே ஆகியவை தங்களது பரிந்துரைகளை ரயில்வே வாரியத்துக்கு அளித்துள்ளன.

நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி மற்றும் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையிலான காலத்தில் குறிப்பிட்ட இடங்களை அடையும் ரயில்களில் சலுகைவிலையில் டிக்கெட்டுகளை விற்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல், காலியாக உள்ள பெட்டிகளில் பயணிக்க டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கு முதல்கட்டமாக 10% முதல் 30% வரையிலும் சலுகை வழங்கவும், பண்டிகை காலங்களில் கூடுதலாக 10% முதல் 20% வரை கட்டணம் வசூலிக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. தீபாவளி, ஆயுத பூஜை, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்கள் பயணிகள் ரயில்களில் அதிகம் பயணிக்கும் பண்டிகை நாட்களாக அந்தப் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 

இதுகுறித்த முடிவை ரயில்வே துறை வரும் 31-ம் தேதிக்குள் எடுக்கவிருப்பதாகவும் ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.