ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு 97 பேர் குழுவினர் அடங்கிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஆந்திர உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

மக்களவை தேர்தலுடன் நடைப்பெற்ற ஆந்திர மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 150-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி ஆட்சியை பிடித்தது. ஆனால், அங்கு பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியை தழுவியது. இதனையடுத்து, முதல்வராக பதவியேற்ற உடனே சந்திரபாபு நாயுடுக்கு பல்வேறு நெருக்கடிகளை ஜெகன் மோகன் கொடுத்து வந்தார். 

இந்நிலையில், சந்திரபாபு நாயுடு, 2003-ம் ஆண்டு முதல்வராக பதவி வகித்த போது, திருப்பதியில் நக்சலைட்கள் நடத்திய கண்ணி வெடி தாக்குலில் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அப்போது முதல், சந்திரபாபுவுக்கு, மத்திய அரசின், இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இது தவிர, ஆந்திர அரசு சார்பிலும், அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. 

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, சந்திரபாபு நாயுடுவிற்கு இனி 2+2 துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் மட்டுமே பாதுகாப்பு எனவும், இசட் பிரிவு பாதுகாப்பு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்தது. இதை எதிர்த்து, ஆந்திர உயர் நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு வழக்கு தொடர்ந்தார்.  

இந்த வழக்கில் நீதிபதி துர்கா பிரசாத் நேற்று பிறப்பித்த உத்தரவில் முன்னாள் முதல்வர், சந்திரபாபு நாயுடுவிற்கு, 97 பேர் அடங்கிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அவரின் பாதுகாப்பு அணிவகுப்பு வாகனத்தில், சிக்னல் ஜாமர் கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அவரின் தலைமை பாதுகாப்பு அதிகாரியை ஆந்திர அரசு நியமிக்கலாம். ஆனால், சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பு பணி யாருடைது என்பதை, தேசிய கமாண்டோ படை மற்றும் மாநில பாதுகாப்பு படை இடையே விவாதித்து மூன்று மாதத்துக்குள் முடிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.