நாட்டில் ‘டிஜிட்டல் பேமெண்ட்’ முறையை ஊக்கப்படுத்தி, நிதிப்பரிமாற்றத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதற்கான செயல்திட்டம் உருவாக்க ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 13 உறுப்பினர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

இந்த குழுவில் ஓடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான், சிக்கிம் முதல்வர் பவான் குமார் சாம்லிங், புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி, மஹாராஷ்டிரா முதல்வர்தேவேந்திர பட்நாவிஸ், நிதி அயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா, நிதிஅயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும், ஆதார் கார்டு உருவாக்கத்தின் முன்னாள் தலைவர் நந்தன் நில்கேனி, பாஸ்டன் ஆலோசனைக் குழுமத்தின் தலைவர் ஜான்மேஜயா சின்ஹா, நெட்கோர் நிறுவனத்தின் மேலாளர் இயக்குநர் ராஜேஸ்ஜெயின், ஐ-ஸ்பிரிட் நிறுவனத்தின் நிறுவனர் சரத் சர்மா, ஆமதாபாத் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தின் நிதித்துறை தலைவர் ஜெயந்த் வர்மா ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறப்பு குழுவின் பணிகள் குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகையில், “ உலகளவில் டிஜிட்டல் பேமெண்ட் முறை எப்படி சிறப்பாக கையாளப்படுகிறது என்பதை அடையாளம் கண்டு, அதை இந்தியத் தரத்துக்கு ஏற்ற வகையில் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆய்வு செய்வார்கள்.

டிஜிட்டல் பேமெண்ட் முறைகளான டெபிட், கிரெடிட் கார்டுகள், ப்ரீ பெய்ட் கார்டுகள், டிஜிட்டல் வாலட்கள், இ-வாலெட்கள், இன்டர்நெட் பேங்கிங், யு.பி.ஐ. பேங்கிங் ஆப்ஸ், உள்ளிட்டவற்றை விரைவாக நாடுமுழுவதும் பரவலாக்குவதற்கான நடவடிக்கைகளை ஆய்வு செய்து, அடுத்த ஒரு ஆண்டில் நடைமுறைப்படுத்த செயல்திட்டங்களை அறிவிக்கும்.

டிஜிட்டல் பேமென்ட் முறை மக்களுக்கு பெரிய அளவில் சென்று சேரும் வகையில் திட்டங்களை வகுப்பது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இந்த முறையின் நலன்கறை புரிந்துகொள்ள உதவுவது ஆகியவற்றுக்கு திட்டமிடப்படும். மாநிலங்களில் உள்ள நிர்வாக முறைகளில் டிஜிட்டல் முறையிலான நிதிப்பரிமாற்றங்களை கொண்டு வருவதற்கான செயல்திட்டங்களை வகுக்கும்.

மேலும், டிஜிட்டல் பேமெண்ட் பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கு தடையாக இருக்கும் காரணிகள், தடைகள் ஆகியவற்றை அடையாளம் கண்டு, அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை காணும் என தெரிவித்தனர்.