தங்கள் பகுதியில் அதிகமாக மின் தடை ஏற்படுவதாக கூறிய நபரிடம் ஆத்திரத்தை வெளிப்படுத்தியதால் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நந்தியால் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் நெருங்குவதினால் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினருக்கு ஆதரவாக சந்திரபாபு நாயுடு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி நேற்றும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவரிடம் ஒருவர் தங்கள் பகுதியில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவதாகவும் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் புகார் தெரிவித்தார்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த சந்திரபாபு நாயுடு அந்த நபரை பார்த்து, “நீங்கள் என்ன பைத்தியமா? அல்லது மது அருந்தி விட்டு வந்தீர்களா” என்று கோபத்துடன் கேட்டார்.

மேலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவராக இருந்தால் தமது கூட்டத்திற்கு வரவேண்டாம் என்றும் சந்திரபாபு நாயுடு விரட்டினார்.

மக்கள் மத்தியில் சந்திரபாபு நாயுடு இவ்வாறு நடந்து கொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.