சண்டிகர் தேர்தல் முடிவுகள் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலித்தால், ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கும் சூழல் ஏற்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள ஆம் ஆத்மி கட்சி, பாஜகவை வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

பஞ்சாப், ஹரியாணா என இரு மாநிலங்களுக்கும் தலைநகராக இருக்கும் சண்டிகர் ஒரு யூனியன் பிரதேசம் ஆகும். அங்கு சண்டிகர் மாநகராட்சிக்கு டிசம்பர் 24 அன்று தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 60.4 சதவீதம் வாக்குப் பதிவானது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்படத் தொடங்கின. சண்டிகர் மாநகராட்சியில் மொத்தம் 35 இடங்கள் உள்ளன. வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது முதலே பாஜகவுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் ஆம் ஆத்மி கட்சி 14 வார்டுகளில் வெற்றி பெற்றது. தற்போது மாநகராட்சியை தங்கள் வசம் வைத்திருக்கும் பாஜக 12 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 8 இடங்களில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் மா நகராட்சியில் தனிப்பெரும் கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுத்தது. பாஜக சார்பில் தற்போது மேயராக ரவி காந்த் சர்மா என்பவர் உள்ளார். இவரே தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார். வழக்கமாக சண்டிகரில் காங்கிரஸ், பாஜக இடையேதான் கடும் போட்டி இருக்கும். ஆனால், முதன் முறையாக மேயர் தேர்தலில் களமிறங்கிய ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என இரு கட்சிகளையும் பின் தங்க வைத்துள்ளது. கடந்த முறை நடந்த சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் மொத்தம் 26 வார்டுகள்தான் இருந்தன. அப்போது பாஜக 20 வார்டுகளில் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது. கூட்டணிக் கட்சியான அகாலி தளம் ஓரிடத்தில் வென்றது. காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் வென்றது.

இந்த மாநகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. பஞ்சாப்பில் இன்னும் 3 மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. சண்டிகர் முதல் தேர்தலிலேயே ஆம் ஆத்மி பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே பஞ்சாப் சட்டப்பேரவை கருத்துக்கணிப்புகளில் ஆம் ஆத்மி முன்னிலை வகித்து வருகிறது. சண்டிகர் தேர்தல் முடிவுகள் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலித்தால், ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடிக்கும் சூழல் ஏற்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.