சபரிமலை பிரச்சனையில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களில் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சியின் பெண் செய்தியாளர் கவிதா, பெண்ணியவாதியான ரஹானா பாத்திமா ஆகியோர் இன்று காலை சபரிமலைக்கு சென்றனர். 

அப்போது ரஹானா இருமுடி கட்டிக்கொண்டு ஐயப்ப பக்தராக சென்றார். அவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இவர்கள் சபரிமலை சந்நிதானத்திற்கு சுமார் 500 மீட்டர் தூரம் வரை அழைத்து செல்லப்பட்டனர். ஆனால், கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் என்று ஐயப்ப பக்தர்கள், தந்திரிகள், நம்பூதிகள் உள்ளிட்டோர் பதினெட்டாம்படி அருகில் நின்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்களது ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு, ரஹானாவும், கவிதாவும், பாதுகாப்புடன் திரும்பிச் சென்றனர். இந்த நிலையில், சபரிமலை கோயிலைப்பூட்டி, சாவியை ஒப்படைத்துவிட்டு திரும்பிச் செல்ல முடிவு செய்துள்ளதாக தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீவரு கூறியுள்ளார். தான் பக்தர்களுக்கு ஆதரவாகவே இருப்பேன் என்றம் அவர் கூறியுள்ளார். சபரிமலையில், பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக போராட்டம் வலுத்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடக செயளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. 

அதில், சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. மூவாயிரம் பேர் வரை போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் சமூக வலைத்தளங்கள், இணையதளசேவையை முடக்கவும் மூன்று மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.