central will announce soon offers for women empowerment
நாட்டில் பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், பெண்களுக்கு வருமானவரியை குறைத்தல், ஆதார் அடிப்படையில் மருத்துவ சிகிச்சைக்கான அட்டை, கர்ப்பிணி பெண்களுக்கு இலவச சிகிச்சை உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு விரைவில் அறிவிக்க இருக்கிறது.
பெண்களுக்கான தேசியக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் அமைச்சர்கள் குழுக்கள் சேர்ந்து, இந்த கொள்கையை உருவாக்கி வருகிறார்கள்.
அந்த கொள்கைகள் உருவாக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், விரைவில் அதை மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்க்கப்படுகிறது. அதில் இந்த திட்டங்களை மத்தியஅரசு அறிவிக்க இருக்கிறது.

அந்த கொள்கையில், வருமான வரி செலுத்தும் பெண்களின் வரியை குறைத்தல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
மேலும், மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின், மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்து அனைத்து பெண்களும் மலிவாக, எளிதாக வாங்கும் வகையில் கொண்டு வருதல்.
பெண்களுக்கு கிராமங்கள் முதல் நகரங்கள் வரை கழிப்பறை வசதி செய்துதருதல், பாலியல்ரீதியான துன்புறுத்தல், கொடுமைகளுக்கு இலவசமாக அரசு சார்பில்சட்டஉதவி, கவுன்சிலிங், தங்குமிடம் கொடுத்தல் போன்றவைகளும் உள்ளன.
அதுமட்டுமல்லாமல் அனைத்து பெண்களுக்கும் ஆதார் அடிப்படையிலான உடல் நல அட்டையை அளித்து, அதில் இலவசமாக உடல் பரிசோதனையை செய்து கொள்ளுதல், குறிப்பாக மார்பகப்புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய் சோதனை செய்து கொள்ளுதல், கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச சிகிச்சை, உடல் நலக்காப்பீடு ஆகிய திட்டங்களை மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விதவைகள், முதியோர்களுக்கு வாழ்வதற்கு உதவிகள்அளித்தல்.
2030-ம் ஆண்டுக்குள் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையை நாட்டில் 50 சதவீதமாக உயர்த்துதல், அரசின் போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் எழுதும் பெண்களுக்கு நுழைவுக்கட்டணம் ரத்து போன்றவையும், இலவச பயிற்சி வகுப்புகள், நகரங்கள், சிறுநகரங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்குவதற்காக அதிகமான விடுதிகள் கட்டுதல் போன்ற திட்டங்களும் உள்ளன.
குறிப்பாக வெளிநாடுகளில் தங்கி இருக்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளான வரதட்சணை கொடுமை, அடிமையாக நடத்துதல், குடும்பவன்முறை ஆகியவற்றில் இருந்து காக்க தனி திட்டம்.

தேசிய மற்றும்பன்னாட்டு அளவில் பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், தூதுவர்களாக, பேச்சுவார்த்தை நடத்தும் நபர்களாக, துணைத் தூதர்களாக, சிறப்பு பிரதிநிதிகளாக நியமித்தல்.
கிராமங்களில் வசிக்கும் பெண்களுக்கு குறைந்த வட்டியில் கிஷான் கடன் அட்டைகள் வழங்குதல், பிரதமர் ஜன் தன் யோஜனா மற்றும் சர்வ சிக்சா அபியான் ஆகியவற்றில் பெண்களை முழுமையாக இணைத்தல் போன்ற திட்டங்களும் தேசியக் கொள்கையில் உள்ளன.
குறிப்பாக 2025-ம் ஆண்டுக்குள் அரசு நிறுவனங்கள் அனைத்திலும் குறைந்தபட்சம் ஒரு பெண்ணுக்கு வேலை கொடுத்தல் திட்டத்தையும் அரசு வைத்துள்ளது.
