Asianet News TamilAsianet News Tamil

மத்திய மந்திரிகளின் செல்போன்களுக்கு கட்டுப்பாடு விதித்த மோடி – ரகசியம் காத்த ரகசியம் வெளியானது

central ministers-cell-phones-regulation
Author
First Published Nov 12, 2016, 12:33 AM IST


ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த தகவல், முன்கூட்டியே வெளியாவதை தடுக்க, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகளின் செல்போன்களுக்கு கட்டுப்பாடு வித்தார். அந்த ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது.

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8ம் தேதி இரவு, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த தகவல் முன்கூட்டியே வெளியாகாமல் ரகசியம் காக்கப்பட்டது. அதற்கு மோடி, மத்திய மந்திரிகளின் செல்போன்களுக்கு கட்டுப்பாடு விதித்தார் என தெரியவந்துள்ளது.

‘மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து மந்திரிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். நான் சொல்லும்வரை யாரும் டெல்லியை விட்டு செல்லக்கூடாது’ என பிரதமர் மோடி அறிவுறுத்தினார். அதன்படி, அனைத்து மந்திரிகளும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

‘மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு எந்த மந்திரியும் செல்போன் கொண்டுவரக்கூடாது’ என்று அமைச்சரவை செயலகம் மூலமாக அனைத்து மந்திரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அந்த உத்தரவு, கடந்த 8ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்திலும் பின்பற்றப்பட்டது. அதனால், எந்த மந்திரியும், தங்களது செல்போனை கொண்டுவரவில்லை.

மத்திய அமைச்சரவை கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் பட்டியலில், இந்தியா – ஜப்பான் இடையிலான ஒப்பந்தம் மட்டுமே இடம்பெற்று இருந்தது. அதைப்பற்றி விவாதிக்கும் நோக்கத்திலேயே மத்திய மந்திரிகள் வந்தனர். அவர்களுக்கே 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கும் திட்டம் பற்றி விவாதிக்கப்படும் என்று தெரியாமல் இருந்தது.

அதுபற்றி விவாதிக்க தொடங்கியவுடன், பிரதமர் மோடி சிரித்து கொண்டே, ‘இதற்காகத்தான் உங்கள் அனைவரையும் கட்டாயம் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினேன். ரகசியங்கள் வெளியே கசிந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் செல்போன்களுக்கு தடை விதித்தேன் என கூறினார்.

இரவு 7.30 மணிக்கு, மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்தது. ஆனால், மந்திரிகள் யாரும் கூட்ட அரங்கில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கும் இதே கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

அங்கிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதியை சந்தித்து, அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கும் முடிவை தெரிவித்தார். அதன்பிறகே, அவர் தொலைக்காட்சியில் இதனை  அறிவித்தார்.

அவர் உரையாற்றி முடிக்கும்வரை, மத்திய மந்திரிகள், அமைச்சரவை கூட்ட அரங்கிலேயே இருந்தனர். அதனால், மாலை 6.45 மணி முதல் இரவு 9 மணிவரை அவர்கள் அங்கேயே இருந்தபோது, யாரிடமும் செல்போன் இல்லாததால், இந்த ரகசியம் முன்கூட்டியே வெளியாகாமல் பாதுகாக்கப்பட்டது. இந்த முடிவு, மத்திய அரசின் உயர் அதிகாரிகள் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும் என்றும் தெரியவந்துள்ளது.

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேலுக்கு அவர் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட பிறகே இந்த நடவடிக்கை பற்றி தெரியும். முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், துணை கவர்னர் ஆர்.காந்தி ஆகியோருக்கும் முன்கூட்டியே தெரியும். முன்னதாகவே இந்த தகவல் கசிந்தால், அதிகளவில் கருப்பு பணம் வைத்திருப்போர், அதை வெள்ளையாக மாற்றி விடுவார்கள் என்பதற்காகவே இந்த ரகசியம் காக்கப்பட்டது.

தீபாவளி, சாத் பண்டிகை ஆகியவை முடியட்டும் என்று காத்திருந்து, இந்த நடவடிக்கையை பிரதமர் அறிவித்துள்ளார். அதே சமயத்தில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிந்த பிறகு அறிவிக்க இயலாத நிலைமை உள்ளது. ஏனென்றால், டிசம்பர் மாதவாக்கில், சில மாநில சட்டசபை தேர்தல்களையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்து விடும்.

அத்துடன், மத்திய பட்ஜெட் தயாரிப்பு வேலைகள் இருப்பதால், பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்ள 50 நாட்களாவது கால அவகாசம் அளிக்க வேண்டிய நிலைமை உள்ளது. இவற்றையெல்லாம் பரிசீலித்துத்தான், கால நேரம் பார்த்து இந்த முடிவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios