அரசின் கொள்கைகள், நடவடிக்கைகள், திட்டங்களை விமர்சிக்கும் ஊழியர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜி.எஸ்.டி. வரி
மத்தியஅரசு கொண்டு வந்த சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) சட்டத்தில், சட்ட அம்சங்களை சேர்க்க ஜி.எஸ்.டி. கவுன்சில்உருவாக்கப்பட்டது. அந்த குழு சமீபத்தில் மாநில அரசுகளுடன் நடத்திய கலந்தாய்வில், சில முக்கிய வரிகளை மாநில அரசுகள் வசூலித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. மத்திய கலால்வரித் துறைக்கு குறைந்த அளவே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
கருப்புபட்டை
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சமீபத்தில் இந்திய வருவாய் துறை, அனைத்து இந்திய மத்திய கலால்வரி அதிகாரிகள் அமைப்பு, அனைத்து இந்திய சுங்க வரி ஆய்வாளர்கள் அமைப்பு, அனைத்து இந்திய சுங்கவரி மற்றும் சேவை வரி அதிகாரிகள் அமைப்பினர் கருப்பு பட்டையை அணிந்து பணியாற்றினர்.
எச்சரிக்கை
இது மத்திய அரசு அரசின் கொள்கையையும், திட்டங்களையும், செயல்பாடுகளையும் விமர்சிப்பதாக இருந்தது. இதையடுத்து, மத்திய அரசின் திட்டங்களையும், கொள்கைகளையும் ஊழியர்கள் விமர்சித்தால் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது.
இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது-
விமர்சிக்க கூடாது
எந்த அரசு அதிகாரியும் தொலைக்காட்சி, வானொலி, மின்னணு ஊடகங்கள் அல்லது எழுத்து மூலமோ தனது பெயரைக் குறிப்பிட்டோ அல்லது புனைப் பெரியரிலோ அரசின் திட்டங்களையும், கொள்கைகளையும், செயல்பாடுகளையும் விமர்சித்து எழுதவும், பேசவும், கருத்துக் கூறவும் கூடாது. மாநில அல்லது மத்திய அரசின் தற்போதுள்ள கொள்கைகள், சமீபத்திய திட்டங்கள், ெசயல்பாடுகளையும் விமர்சிக்கக் கூடாது.
ஒழுங்கு நடவடிக்கை
அவ்வாறு இந்த உத்தரவுக்கு பணிய மறுத்து, அரசை விமர்சித்தும், எதிராகவும் கருத்துக்களை தெரிவிக்கும் ஊழியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிராக செயல்படமாட்டோம்
இது குறித்து இந்திய வருவாய் துறை அதிகாரிகள் அமைப்பின் தலைவர் அனுப் ஸ்ரீவஸ்தவாவிடம் நிருபர்கள் கேட்டபோது, “ அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும், செயல்பாடுகளையும் ஊழியர்கள் யாரும் எதிராக விமர்சிக்க மாட்டார்கள், விமர்சிக்கவும் இல்லை. அரசின் உத்தரவுக்கு முழுமையாக பணிகிறோம். நாட்டின் நலனுக்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு துணையாக இருப்போம். கடந்த 10 ஆண்டுகளாக ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வர கடுமையாக உழைத்து வருகிறோம். ஆதலால், இந்த ஜி.எஸ்.டி. வரி எந்தவிதமான சச்சரவுகளும், தடைகளும் இல்லாமல் நடைமுறைக்கு வர விரும்புகிறோம்'' எனத் தெரிவித்தார்.
