நாட்டில் இருக்கும் போலி நிறுவனங்கள் மீது மிகத் துரிதமான நடவடிக்கைகளை எடுக்கப்படும், அதே சமயம், எளிதாக தொழில் செய்யும் தன்மை பாதிக்கப்படாமல் சமநிலை காக்கப்படும். எந்த நிறுவனமும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பது உறுதி செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி எச்சரிக்கை விடுத்தார்.

மத்திய நிதி, கார்ப்பரேட் துறை அமைச்சருமான அருண் ஜெட்லி, மக்களவையில் நேற்று எழுத்து மூலம் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார். அவர் பேசியதாவது-

கம்பெனிச் சட்டத்தில் போலி நிறுவனங்கள் என்ற வார்த்தைக்கு விளக்கமே கொடுக்கப்படவில்லை. இதுபோன்ற நிறுவனங்கள் பணத்தை சுழற்ச்சிக்கு விடவும், பதுக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த போலி நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது பினாமி சட்டம், வருமானவரி சட்டத்தின் கீழ் துரிதமான நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 7-ந்தேதி பங்குச்சந்தை ஒழுங்கு அமைப்பு நிறுவனமான செபி, பங்குச்சந்தையில் செயல்பட்டுவரும் 331 போலி நிறுவனங்களை அடையாளம் கண்டு கார்ப்பரேட் அமைச்சகம் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளது.

நாட்டில் எளிதாகச் தொழில் செய்யும் சூழலுக்கு எந்த விதத்திலும் ஆபத்து ஏற்படாமல், நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் கண்காணித்து சமநிலை காக்கப்படும். தொழில்நுட்பம் இருப்பதால் அது பெரிய சிரமமாக இருக்காது.

போலியான நிறுவனங்கள், பெயர்களுடன் வர்த்தகம் செய்தால், அவர்கள் மீது பினாமி சட்டம் பாயும். இதற்காக கம்பெனிச் சட்டத்தில் சிறிய திருத்தங்கள் செய்யப்பட உள்ளது. அதன்பின், போலி நிறுவனங்களை ஆய்வு செய்வது, கண்காணிப்பில் கொண்டுவருவதுபோன்ற நடவடிக்கைகள் எடுப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யவில்லை

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்துள்ள மத்திய அரசு, விவசாயிகளுக்கு ஏன் மறுக்கிறது என்று அரசு மீது குற்றம் சாட்டி காங்கிரஸ் எம்.பி.தீபீந்தர் சிங் ஹூடா பேசினார்.

அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜெட்லி, “ இதுபோன்ற விஷயங்களை பேசும் போது, உண்மையை அறிந்து கொண்டு பேசுங்கள். கார்ப்பரேட் கடன் தள்ளுபடி என்பது, வங்கிகளின் வர்த்தக ரீதியான முடிவு. ஆனால், 2014ம் ஆண்டில் இருந்து கடன் தள்ளுபடி என்ற திட்டமே அரசிடம் இல்லை.

மார்ச் மாதம் முடிவு வரை விவசாயம் தொடர்பான வராக் கடன் ரூ.62 ஆயிரத்து 307 கோடியாகும். இது கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 31ந்தேதி நிலவரப்படி ரூ.51 ஆயிரத்து 964 கோடியாக இருந்தது.

விவசாயத்துக்கு அளிக்கப்படும் கடன் தள்ளுபடியை குறைத்தால் மட்டுமே வராக் கடன் குறையும் என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே 2016-17ம் ஆண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது எனத் தெரிவித்தார்.